உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம்

பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம்

பள்ளி படிப்பு முடிந்த உடனேயே ஸ்ரீதருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டது. சினிமாவில் பல வேலைகளை செய்தார். ஆபீஸ் பாய், படப்பெட்டி டெலிவரி பாய் இப்படி பல வேலை செய்தவர். அதற்கு இடையே சினிமாவிற்காகவே ஒரு கதை எழுதினார். 'லட்சியவாதி' என்ற அந்த கதையை எடுத்துக் கொண்டு ஏவிஎம் நிறுவனத்திற்கு சென்றார்.

அப்போது ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த ப.நீலகண்டனை சந்தித்தார். அப்போது ஸ்ரீதருக்கு 17 வயது. அவரின் வயதையும், தோற்றத்தையும் பார்த்த ப.நீலகண்டன். நீயெல்லாம் என்ன கதை எழுதியிருக்க போகிறாய். போய் படிக்கிற வேலையை பார் என்று கதையை படிக்காமலேயே திருப்பி அனுப்பி விட்டார்.

இதனால் மனம் நொந்த ஸ்ரீதர், அந்த கதையை நாடகத்திற்கு ஏற்றவாறு மாற்றி எழுதி அதனை அப்போது நாடகம் நடத்தி வந்த டி.கே.சகோதரர்களிடம் கொடுத்தார். அவர்களுக்கு அந்த கதை பிடித்துப்போனது. அதை 'ரத்தபாசம்' என்ற பெயரில் நாடகமாக நடத்தினார்கள். நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனால் அதே தலைப்பில் அதனை திரைப்படமாக தயாரித்தார்கள்.

இந்த படத்தை ஆர்.எஸ்.மணி இயக்கினார். டி.கே.சண்முகம், டி.கே. பகவதி, அஞ்சலி தேவி, எம்.எஸ். திரௌபதி, டி.எஸ். பாலையா, என்.ஆர். வித்யாவதி, எம்.எஸ். கருப்பையா, குண்டுமணி, பி.எஸ். வெங்கடாசலம், டி.எஸ். தட்சிணாமூர்த்தி, கே.ஆர். சீதாராமன், கே. சாயீராம் மற்றும் டி.ஆர்.பி. ராவ் ஆகியோர் நடித்தனர். எம்.கே.ஆத்மநாதன் இசை அமைத்தார்.

படமும் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படத்தின் கதை உரிமையை வாங்கிய ஏவிஎம் நிறுவனம் அதனை 'பாய் பாய்' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தது. அசோக்குமார், கிஷோர் குமார், நிம்மி நிரூபா ராய் நடித்தார்கள். அங்கும் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !