இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள்
இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பணியை தொடங்கியவர் வி.சேகர். பின்னர் 1990ம் ஆண்டு நீங்களும் ஹீரோதான் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி மற்றும் செந்தில் அந்த படத்தில் நடித்திருந்தனர். அடுத்து, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, விரலுக்கு ஏத்த வீக்கம், எல்லாமே என் பொண்டாட்டிதான், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். குறிப்பாக, குடும்ப படங்களில் இயக்குவதில் அவர் திறமைசாலி. அவர் படங்களில் காமெடி காட்சிகளும் பேசப்படும்.
தனது மகனை ஹீரோவாக வைத்து சரவண பொய்கை என்ற படத்தை இயக்கினார். அடுத்து சிலை கடத்தல் வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்க, சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட, மயங்கி நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இப்போதும் அதே நிலையில் இருப்பதாக தகவல். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடை பட்டு இருப்பதால் ஆபரேஷன் செய்ய முடியவில்லை என தகவல்.
இந்நிலையில், தனது தந்தை உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவர் உடல்நிலை சரியாக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அவர் மகன் கார்ல்மார்க்ஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.