உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம்

'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம்


தீபாவளியையொட்டி வெளியான திரைப்படங்களில் வணிகரீதியில் பேசப்படாத போதும், பலதரப்பிலும் வரவேற்பு பெற்ற படம் 'டீசல்'. நடிகர், வசன கர்த்தா, எழுத்தாளராக இருந்து இயக்குனராக உயர்ந்திருப்பவர் சண்முகம்.

இவரிடம் பேசிய போது...

விருத்தாச்சலம் சொந்த ஊர். கல்லுாரியில் படிக்கிற வரைக்கும் சினிமா ஆர்வம் இல்லை. நடிகர் அஜித்தின் ரசிகர். அவரது படங்களை விடாமல் பார்த்து விடுவேன். அந்த காலகட்டத்தில் தான் சினிமா மீது பிடிப்பு துவங்கியது.

எங்கள் ஊரைச் சேர்ந்த வீரபாண்டி, 'காதல்கோட்டை' உள்ளிட்ட சில படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். இயக்குனர் நகுலன் பொன்னுசாமியிடம் அவர் என்னை அறிமுகப்படுத்தினார். 'வர்ணஜாலம்' படத்தில் உதவி இயக்குனர் வாய்ப்பை தந்தார் நகுலன் பொன்னுசாமி. பின் தங்கர்பச்சான் அறிமுகம் கிடைக்க, அவரது சில படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.

கனா, ஜடா, புருஸ்லீ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தேன். விஜய்சேதுபதி நடித்த கருப்பன், ஜி.வி.பிரகாஷ் நடித்த 'பென்சில்' படங்களுக்கு வசனம் எழுதினேன். இந்த நட்பு அடிப்படையில் 'அடங்காதே' படத்தை இயக்கினேன். ஜி.வி.பிரகாஷ் ஹீரோ.. சென்சார் உள்ளிட்ட சில பிரச்னைகளால் டிசம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாகவுள்ளது.

நான்கு வழிச்சாலையில் டேங்கர் லாரி டிரைவர்கள் ஓய்வு எடுக்க ஆங்காங்கே 'காபா' செயல்படும். அங்கு டேங்கர் லாரிகளிலிருந்து பெட்ரோல், டீசல் திருடுவதை நான் பார்த்தேன். அதுகுறித்து விசாரித்த போது அதன் பின்னணியில் சில சம்பவங்கள் தெரியவந்தது. அதை மனதில் வைத்து டீசல் படத்தை இயக்கினேன். மக்கள் பிரச்னைகளை படமாக எடுக்கும் போது வரவேற்பு கிடைக்கும். டீசல் படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், தியேட்டர்கள் கிடைக்காததால் கும்பகோணம், திருவாரூர், நாகபட்டினம் பகுதிகளில் வெளியிட முடியாத நிலை. டீசலுக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் வருவாய் அவ்வளவு இல்லை.

படத்தை பார்த்து இயக்குனர் சேரன் என்னை அழைத்து ஒரு மணிநேரம் பேசியது மகிழ்ச்சி தந்தது. இயக்குனர்கள் வசந்தபாலன், தங்கர்பச்சான், நடிகர் ஜி.வி.பிரகாஷ் பாராட்டினர். வீட்டில் சினிமா குறித்து பேச மாட்டேன். டீசல் படம் பார்த்து விட்டு தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அமைதியாக இருந்து கொண்டு, இவ்வளவு பெரிய படத்தை இயக்கியுள்ளாரே என அசந்து போயினர்.

அஜித்தை இயக்க ஆசை சமீபத்தில் பார்த்த லப்பர்பந்து, டூரிஸ்ட் பேமிலி, மண்டேலா, போர்தொழில் என்னை இம்பரஸ் செய்து விட்டன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றதுடன் அதிகளவு வருவாயையும் ஈட்டி கொடுத்துள்ளன.

நடிகர் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர் பார்வையில் நான் படும் போது அது சாத்தியமாகும்.

சினிமா எப்படி பிடிக்கிறதோ அதுபோல நன்றாக சாப்பிட பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு மதுரை வரும் போது எல்லா அயிட்டங்களையும் கேட்டு வாங்கி சாப்பிடுவேன்.

தமிழ் சினிமா நிலை கவலை தருவதாக உள்ளது. ஏராளமான வேலைவாய்ப்பு தந்து, கோடிக்கணக்கான வருவாயை மத்திய, மாநில அரசுகளுக்கு ஈட்டி தருகிறது. ஆண்டுக்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் நிலையில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதற்கு ஏற்ப இல்லை. புது மால்கள் உருவாகி தியேட்டர்கள் வந்தாலும் புகழ்பெற்ற பல தியேட்டர்கள் இடிக்கப்படுகின்றன. பெரிய நடிகர்கள் படங்கள் பல தியேட்டர்களில் மூன்று வாரங்களுக்கு மேல் திரையிட்டால் தான் போட்ட பணம் கிடைக்கும் நிலை. இதுபோன்று பல பிரச்னைகள் உள்ளன. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பேச வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் உதவ வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !