பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம்
சினிமாவின் வருகைக்கு முன் நடத்தப்பட்ட பல நாடகங்கள் பின்னர் திரைப்படங்களானது. தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட நாடகங்களும், மராட்டிய நாடகங்களும் சினிமா ஆனது. ஒன்றிரண்டு மலையாள நாடகங்களும் சினிமா ஆனது. அதில் முக்கியமானது 'வைரமாலை'.
தோட்டக்கர விஸ்வநாதன் என்ற மலையாள நாடக ஆசிரியர் எழுதிய நாடகம் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது. காணாமல் போன ஒரு வைரமாலையை சுற்றி நடக்கிற காமெடி கதை. நாடகத்தை பார்த்தவர்கள் சிரித்து சிரித்து வயிறு வலித்ததாக அப்போது கூறுவார்கள்.
இதனால் இந்த நாடகத்தை தமிழ் சினிமாவாக்க விரும்பினார் அப்போதைய மலையாள தயாரிப்பாளர் ஏ.சி.பிள்ளை. தமிழ் தயாரிப்பாளர் ஸ்ரீபாத சங்கருடன் இணைந்து இதனை தயாரித்தார். பத்மினி, ராகினி, ஆர்.எஸ்.மனோகர், தங்கேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
முழுநீள நகைச்சுவை சித்திரம் என்று விளம்பரம் செய்யப்பட்டு படம் வெளியானாலும், நாடகம் சிரிக்க வைத்த அளவிற்கு சினிமா சிரிக்க வைக்க தவறியதால் படம் தோல்வி அடைந்தது.