ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா
இந்தியத் திரையுலகத்தின் தனித்துவம் வாய்ந்த இசையமைப்பாளராக இத்தனை வருடங்களாக இருந்து வருபவர் இளையராஜா. 80 வயதைக் கடந்த பின்பும் ஓயாமல் உழைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையமைத்து இசையுலகை ரசிக்க வைத்தார்.
இப்போது மீண்டும் சினிமா பக்கம் அவரது இசையால் ரசிகர்களை பேச வைத்துள்ளார். ஒரு பக்கம் மராத்தி படமான 'கோந்தல்' படத்தில் இளையராஜா இசையில் 'சந்தன்' பாடல், மறு பக்கம், இளையராஜா இசையில் வெளியான 'எ பியூட்டிபுல் பிரேக்அப்' ஆங்கிலப் படத்தின் டீசர் ஆகியவை ஒரே நாளில் வெளியாகி உள்ளன.
இரண்டிலுமே மாறுபட்ட இசையைக் காணலாம். மராத்தி பாடலில் மொழி புரியவில்லை என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் கூட அந்தப் பாடலின் மெலடி குறித்து பாராட்டி எழுதி வருகிறார்கள். 'எ பியூட்டிபுல் பிரேக்அப்' டீசர் இப்போதுதான் ரசிகர்களைத் தேட வைத்துள்ளது. ஒரு ஆங்கிலப் பாடலுடன் அமைந்துள்ள ரொமான்டிக் திரில்லர் டீசர் ஆக அது உள்ளது.
ஒரு தமிழ் இசையமைப்பாளர் மொழிகளைக் கடந்து தனது இசையால் ரசிகர்களைப் பேச வைத்துள்ளது இளையராஜாவுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.