பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை”
பல எதிர்ப்புகளை மீறி, 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜிகணேசன், தொடர்ந்து அத்திரைப்படத்தில் தான் நடிப்போமா மாட்டோமா என்ற ஒரு வித அச்ச உணர்வோடு இருந்து வந்த வேளையில், ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டூடியோவிற்கு சென்று நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டது போலவே, நடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான “அஞ்சலி பிக்சர்ஸ்” அலுவலகத்திற்கும் சென்று வாய்ப்பு கேட்க, அப்போது அங்கே இருந்த இயக்குநர் எல் வி பிரசாத், வாய்ப்பு கேட்டு வந்த வி சி கணேசனின் கண்களைக் கண்டு வியந்திருக்கின்றார்.
1950ம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படமான “ராஜ் ராணி” என்ற திரைப்படத்தின் உரிமையை வாங்கி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் படத்தை எடுக்க முடிவு செய்து, படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குநர் எல் வி பிரசாத்திடம் ஒப்படைத்திருந்தனர் “அஞ்சலி பிக்சர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தினர். இந்தி திரைப்படத்தின் நகலாக இல்லாதவாறு திரைக்கதையில் சில நுட்பமான மாற்றங்களைச் செய்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் எல் வி பிரசாத். தெலுங்கில் “பரதேசி”, தமிழில் “பூங்கோதை” என்ற பெயர்களில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பினை சிவாஜிக்கு வழங்கிய இயக்குநர் எல் வி பிரசாத், பையன் மிகப் பெரிய நடிகனாக வருவான் என சிவாஜியைப் பற்றி அப்போதே நடிகை அஞ்சலிதேவியிடமும் கூறியிருக்கின்றார்.
ஏ நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்த இத்திரைப்படம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வந்தது. தெலுங்கு பதிப்பில் நடித்து வந்த ஒரு நடிகரின் நடிப்பு இயக்குநர் எல் வி பிரசாத்திற்கு திருப்தியளிக்காததால், தமிழில் அந்த வேடத்தில் நடித்திருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனையே தெலுங்கிலும் நடிக்கச் செய்தார். இப்போது போல ஒரு நடிகர் வாயசைத்து நடிக்க, அதற்கு வேறொருவரின் குரலை இணைக்கும் வசதி எல்லாம் அப்போது இல்லாததால், தெலுங்கு வசனங்களையும் சிவாஜியே பேசி நடித்திருந்தார். தெலுங்கு வசன உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதி மனப்பாடம் செய்து தெலுங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேசியது கேட்டு இயக்குநர் எல் வி பிரசாத் வியந்து பாராட்டியுமிருக்கின்றார்.
எஸ் வி ரங்காராவ், பண்டரிபாய், ரேலங்கி, வசந்தா ஆகியோரும் நடித்திருந்த இந்த “பரதேசி” திரைப்படம்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த முதல் நேரடி தெலுங்கு திரைப்படம். நடிகர் ஏ நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி மற்றும் இயக்குநர் எல் வி பிரசாத் ஆகியோருடன் சிவாஜிகணேசன் இணைந்து பணிபுரிந்த முதல் திரைப்படமாகவும் இது அறியப்படுகின்றது. முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சியை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியிருந்ததும் இத்திரைப்படத்தின் மூலமே.
இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் உருவாகி வந்த இதே காலகட்டத்தில்தான் நடிகர் திலகத்தின் “பராசக்தி” திரைப்படமும் உருவாகி வந்தது. “பரதேசி” மற்றும் “பூங்கோதை” திரைப்படத்திற்கு முன்பாக தனது “பராசக்தி” திரைப்படம் வெளிவரவேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் நடிகை அஞ்சலிதேவியிடம் கோரிக்கை வைக்க, அவ்வாறு “பராசக்தி” திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதல் படமாக வெளிவந்து சாதனை படைத்தது.