சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் குறிப்பாக தெலுங்கு இயக்குனர்களில் முக்கியமானவர் ராம் கோபால் வர்மா. அவரது இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளிவந்த 'சிவா' திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் வரும் நவம்பர் 14ம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது. அப்படம் குறித்து தெலுங்குத் திரையுலகத்தின் இயக்குனர்கள், நடிகர்கள் அவர்களது அனுபவத்தைப் பகிர்ந்து படத்தின் ரீரிலீஸுக்கு உதவி வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி அப்படம் குறித்து 2 நிமிட வீடியோ ஒன்றைப் பேசியுள்ளார். அதில் “சிவா' படம் தெலுங்கு சினிமாவின் டிரென்ட் சென்டர் படம் என்றும், படம் வெளியான போதே, தெலுங்குத் திரையுலகத்தை எதிர்காலத்தில் ராம் கோபால் வர்மா ஆளுமை செய்வார் என்று நினைத்தேன்,” என்றும் பாராட்டிப் பேசியுள்ளார்.
இதற்கு முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரஞ்சீவி மற்றும் அவரது தம்பி பவன் கல்யாண் உள்ளிட்டோரை கிண்டலடித்து, விமர்சனம் செய்து பல்வேறு பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் ராம்கோபால் வர்மா. அவையெல்லாம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 'சிவா' படத்தின் ரீரிலீஸுக்காக சிரஞ்சீவி பேசிய வீடியோவை ஷேர் செய்துள்ள ராம்கோபால் வர்மா அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
“நன்றி சிரஞ்சீவி காரு, இந்த சந்தர்ப்பத்தில், நான் எப்போதாவது தெரியாமல் உங்களை புண்படுத்தியிருந்தால், அதற்கு உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. உங்கள் பெரிய மனதுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.