கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்'
அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது நாகபந்தம். முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான அனுபவமாக ஆன்மிகத்தையும், ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லராக இந்த படம் வருகிறது. இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோவில்களின் பின்னணியில் உருவாகி, நூற்றாண்டுகள் பழமையான நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மிக மரபை வெளிக்கொணர்கிறது.
பத்மநாபசுவாமி, பூரி ஜகந்நாதர் போன்ற கோவில்களில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷ கதைகளில் இருந்து ஊக்கம் பெற்று, புராணமும் மர்மமும் கலந்த ஒரு தெய்வீகத் திரில்லராக இது உருவாகி வருகிறது என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் முக்கிய சிறப்பம்சமாக உருவாகிறது “ஓம் வீர நாகா” எனும் பக்திப் பாடல். ஐதராபாத் ராமாநாயுடு ஸ்டூடியோவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிவன் கோவில் செட்டில் படமாக்கப்படுகிறது.
இப்பாடலுக்கான இசையை அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் அமைத்துள்ளனர். பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா இந்தப் பாடலுக்கான நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.