உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம்

பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம்


பிரபல தமிழ் நாடக ஆசிரியரும், வசனகர்த்தாவுமான எஸ் டி சுந்தரம் அவர்களும், தமிழ் திரையுலகின் மற்றுமொரு தலைசிறந்த வசனகர்த்தாவான சக்தி டி கே கிருஷ்ணசாமியும் இணைந்து 'சக்தி நாடக சபா' என்ற பதாகையின் கீழ் அரங்கேற்றிய நாடகம்தான் “கவியின் கனவு”. எஸ் டி சுந்தரம் எழுதிய இந்நாடகத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எம் என் நம்பியார், எஸ் வி சுப்பையா ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர்.

150 முறைக்கு மேல் அரங்கேற்றமாகி, மிக பிரபலமடைந்திருந்த இந்நாடகம், ஒரு முறை நாகப்பட்டினத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது, திருச்சியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்ல “கவியின் கனவு ஸ்பெஷல்” என்று இந்நாடகத்தின் பெயரிலேயே சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது ரயில்வே நிர்வாகம்.

இத்தனை சிறப்புக்குரிய இந்த “கவியின் கனவு” நாடகத்தில் இடம் பெற்ற ஒரு பிரதான கதாபாத்திரம்தான் 'ராஜகுரு'. அந்த ராஜகுரு கதாபாத்திரத்தை நாடகத்தில் ஏற்று நடித்திருந்தவர் நடிகர் எம் என் நம்பியார். இந்த நாடகத்தின் கதையை திரைப்படமாக எடுக்க பல தயாரிப்பாளர்கள் அப்போது பேரம் பேசி முயற்சித்து வந்த வேளையில், ராஜகுருவாக நடித்த நடிகர் எம் என் நம்பியார் அந்தக் கதாபாத்திரத்தின் சிறப்புகளை 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரத்திடம் ஒரு முறை கூற, அவர் மு கருணாநிதியிடம் சொல்லி, அதே போன்ற 'ராஜகுரு' பாத்திரப் படைப்பு ஒன்றை உருவாக்கி, மு கருணாநிதி தனது கதை வசனத்தில் அமைத்துத் தந்த திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “மந்திரி குமாரி”.

எம் ஜி ராமச்சந்திரன், மாதுரி தேவி, ஜி சகுந்தலா, எஸ் ஏ நடராஜன், ஏ கருணாநிதி, முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்து, 1950ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியை சுவைத்த இத்திரைப்படத்திலும் அந்தக் குறிப்பிடும்படியான 'ராஜகுரு' கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமான நடிப்பைத் தந்திருந்தவர் நடிகர் எம் என் நம்பியாரே. “மந்திரி குமாரி” திரைப்படம் வெளியான பின்பு, எஸ் டி சுந்தரம் அவர்களின் “கவியின் கனவு” நாடகத்தை திரைப்படமாக்கும் முயற்சியை முழுவதுமாக விட்டனர் படத் தயாரிப்பாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !