உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா

அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா

புட்டபர்த்தி சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் மகிமை சொல்லும் படமாக வருகிறது அனந்தா. 5 கிளைக்கதைகள் கொண்ட இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, சுகாசினி, ஜெகபதிபாபு, தலைவாசல் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், அபிராமி வெங்கடாலம் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசையமைக்க, கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். சென்னையில் நடந்த இந்த பட பாடல், டீசர் வெளியீட்டு விழாவில் புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய் மத்திய அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரத்னாகர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.

இந்த விழாவில் சுரேஷ் கிருஷ்ணா பேசியது : ''நான் ஒரு காலத்தில் பன்ச் டயலாக் பேசும் படங்கள், சங்கமம், ஆஹா மாதிரி படங்களும் எடுத்தேன். அப்போது சத்ய சாய்பாபா அருளை, மகிமையை சொல்லும் ஒரு கமர்ஷியல் படம் எடுக்கணும். ஆனா, அந்த படத்தில் பாபாவாக யாரும் நடிக்க மாட்டாங்கனு தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி வந்தார். எனக்கு பழைய நினைவுகள் வந்தது. 2009ல் இப்படி ஒரு படம் எடுக்க வாய்ப்பு வந்தது. சாய்பாபா வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கணும்னு ஒரு நண்பர் சொன்னார். அப்போது புட்டபர்த்தி சென்றேன். அந்த சமயத்தில் என் அருகில் தனது வீல் சேரை நிறுத்தி தெலுங்கில் ''இவ்வளவு ஆண்டுகள் எங்கே இருந்த, ஏன் வரலை, இப்ப வந்துட்டே' என்று பாபா பேசினார். எனக்கு அழுகை வந்தது. அப்புறம் பல ஆண்டுகள் ஓடியது.

கடந்த ஆண்டு ஒருநாள் அதிகாலை 3.30 மணிக்கு என் கனவில் பாபா வந்தார். என்னிடம் விபூதியை கொட்டினார். மறுநாள் உங்களை வைத்து சாய்பாபா படம் எடுக்க, ரத்னாகர் சாரிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் மிரண்டுவிட்டேன். இந்த பட தயாரிப்பாளர் கிரிஷ் என் கனவில் சாய்பாபா படம் பண்ண வேண்டும் என்று கட்டளை வந்தது. உங்க முகம் வந்து சென்றது என்றார்.

இந்த ஆண்டு பாபா 100வது ஆண்டு என்பதால் அனந்தா பட பணிகளை உடனே தொடங்கினோம். முதலில் சரியான கதை பிடிபடவில்லை. ஒருநாள் அதிகாலை 3.30க்கும் டக்கென இந்த படக்கரு வந்தது. உடனே லேப்டாப்பில் ஒரு மணி நேரத்தில் இந்த கதையை எழுதினேன். அனந்தா படப்பிடிப்பிலும் பல அதிசயம் நடந்தது.

எங்களுக்கு கேரளாவில் மழை பொழிந்தது உதவியது. காசியில் சிறப்பாக படப்பிடிப்பு நடக்க உதவிகள் கிடைத்தன. இந்த படத்தில் பாபா மாதிரி எந்த நடிகரும் நடிக்க கூடாது என்று ரத்னாகர் சார் சொன்னார். நிஜ பாபா வீடியோவை பயன்படுத்தினோம். தவறான டான்ஸ், தவறான விஷயங்கள் படத்தில் கூடாது என்றார். அதன்படியே படப்பிடிப்பு நடந்தது. இவ்வளவு ஏன், தேவா இசையில், பா, விஜய் எழுத அன்னையும் நீயே என்ற பாபா பாடல் கூட 10 நிமிடத்தில் முடிந்தது. இதை நான் கம்போஸ் பண்ணலை, பாபா நடத்தினார் என்றார் தேவா. இப்படி பல அதிசயங்கள் அனந்தா படப்பிடிப்பில் நடந்தது. சத்யசாய் பக்தர்களுக்கு இந்த படம் முழுமையான பக்திபடமாக இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !