உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர்

நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர்


நடிகர்கள் நாக சைதன்யா சமந்தா இருவரும் படங்களில் ஒன்றாக நடித்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் தெலுங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா என்பவர் நாகசைதன்யா, சமந்தா ஆகியோரின் விவாகரத்து பின்னணியில் தெலுங்கானா கட்சியான பாரத் சமிதியின் தலைவர் கே.டி.ராமாராவின் தலையீடு இருந்தது என்று ஒரு கருத்தை கூறியிருந்தார்.

இதற்கு நாகார்ஜுனா, நாகசைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்ட மூவருமே தங்களது பலத்தை எதிர்ப்பை தெரிவித்தனர். நாகார்ஜுனா, அமைச்சர் கொண்டா சுரேகா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இது நடந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் தற்போது திடீரென அமைச்சர் கொண்டா சுரேகா, நாகார்ஜுனா குடும்பம் குறித்து தான் பேசிய வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்து சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறும்போது, “நாகார்ஜுனாவை பற்றியோ அவர்கள் குடும்ப உறுப்பினர்களை காயப்படுத்தும் விதமாகவோ நான் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அப்படி காயப்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. அவர்களுக்கு எனது பேச்சு தொடர்பான ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அந்த வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக தாங்கள் கூறிய அவதூறு கருத்துகளுக்காக பெரும்பாலும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே பலரும் மன்னிப்போ வருத்தமோ தெரிவிப்பது தான் வழக்கம். இப்படி ஒரு வருடம் கழித்து ஒரு அமைச்சர், நாகார்ஜுனாவிடம் தனது வருத்தத்தை தெரிவித்திருப்பது திரை உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !