உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார்

குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார்

சென்னை : குடும்ப பாங்கான படங்களை தந்த இயக்குனர் வி சேகர், 72, காலமானார். உடல்நலக் குறைவால் கடந்து பத்து நாட்களுக்கு மேலாக சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(நவ., 14) மாலை காலமானார்.

திருவண்ணாமலை, நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன் - பட்டம்மாள் தம்பதிக்கு 1953ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி பிறந்தவர், வி.சேகர். உறவினர் கண்ணப்பன் உதவியால் ஏவி.எம்.ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் மாநகராட்சி சுகாதார துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் அப்படியே மாலை நேரக் கல்லூரியில் படித்து எம்.ஏ. படிப்பு முடித்தார்.

கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய 'கண்ண தொறக்கனும்சாமி படத்தில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர், பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார். இவர் இயக்கிய முதல் படம் 'நீங்களும் ஹீரோதான்'. தொடர்ந்து 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படம் அவருக்கு வெற்றியை தந்தது.

குடும்ப பட இயக்குனர்
அதன் பிறகு 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'பார்வதி என்னை பாரடி', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நான் பெத்த மகனே', 'காலம் மாறிப் போச்சு', 'பொங்கலோ பொங்கல்', 'எல்லாமே என் பொண்டாட்டிதான்', 'விரலுக்கு ஏத்த வீக்கம்', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'வீட்டோட மாப்பிள்ளை', 'நம்ம வீட்டு கல்யாணம்', 'ஆளுக்கொரு ஆசை' போன்ற தமிழ்ப் படங்களை இயக்கியவர், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், மீனா நடிப்பில் 'ஹெந்தீர் தர்பார்' என்கிற படத்தையும் இயக்கினார். குறிப்பாக, குடும்ப படங்களில் இயக்குவதில் அவர் திறமைசாலி. அவர் படங்களில் காமெடி காட்சிகளும் பேசப்படும்.

இயக்குனராக மட்டுமல்லாது தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் ஏய் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். சின்னத்திரையிலும் டிவி தொடர் எடுத்துள்ளார். ஓரிரு படங்களில் நடித்தும் உள்ளார்.

சிலை கடத்தல் வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்க, சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 10 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட, மயங்கி நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இன்று காலமானார்.

வி சேகருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர். சேகர் உடல் நாளை தான் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறது. நாளை இறுதிச்சடங்கு நடக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !