இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு
ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பையே பிரம்மாண்டமான நிகழ்ச்சி மூலம் வெளியிட்டார்கள். அதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சில முக்கிய ஊடகங்களையும் அழைத்திருந்தார்கள்.
கடந்த சனிக்கிழமையன்று நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, உடனடியாக படத்தின் புரமோஷனையும் ஆரம்பித்துவிட்டது படக்குழு. வெளிநாடுகளிலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஊடகங்களுக்கு பேட்டிகளைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஏஜென்சி ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறதாம். அவர்கள் மூலம் படத்தை சர்வதேச அளவில் கொண்டு போகத் திட்டமிட்டுள்ளார்களாம்.
பேட்டி கொடுக்கும் போது எடுத்த சில புகைப்படங்களைக் பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா, “தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் இந்த இரு ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதும், எஸ்.எஸ். ராஜமவுலி படத்திற்காக ஒன்று சேர்வதும், ஏற்கனவே இவ்வளவு பெரிய பாக்கியமாக இருக்கிறது.
அதன் மேல், எங்கள் திரைப்படத்தை அதன் வெளியீட்டிற்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சர்வதேச ஊடகங்களுடன் புரமோஷன் செய்கிறோம்! அவர்களின் எதிர்வினைகளைப் பார்ப்பதும், எதிர்பார்ப்பு உருவாவதும் குறைந்தபட்சம் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.
கடவுளின் அருளால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் இருப்போம்.
ஜெய்ஸ்ரீ ராம்,” என்று பதிவிட்டுள்ளார்.