உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள்

பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள்


எம் ஜி ஆரின் சிறப்புமிக்க திரைப்படங்கள் பலவற்றில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாக பார்க்கப்படும் திரைப்படம்தான் “எங்கள் தங்கம்”. 'மேகலா பிக்சர்ஸ்' என்ற பதாகையின் கீழ், மு கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் இருவரும் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. சி என் அண்ணாதுரை, ரா நெடுஞ்செழியன், மு கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என தமிழகத்தை ஆண்ட ஐந்து முதல்வர்கள் பங்குபெற்ற ஒரு திரைப்படமாக இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும் குறிப்பாக “நான் அளவோடு ரசிப்பவன்” என்ற பாடலுக்கும், “நான் செத்துப் பிழைச்சவன்டா” என்ற பாடலுக்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணியே உண்டு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பாடல் காட்சிக்கான பாடலை எழுத, கவிஞர் வாலி, மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் கொடுத்திருந்த மெட்டிற்கு பொருத்தமாக “நான் அளவோடு ரசிப்பவன்” என்று முதல் வரியை எழுதிவிட்டு, அடுத்த வரியை எழுத ஆழ்ந்த யோசனையில் முழ்கி, வெற்றிலை சீவலை வாயில் போட்டு மென்று கொண்டிருந்த கவிஞர் வாலியின் அருகில் வந்து நின்ற மு கருணாநிதி, விபரத்தை அவரிடம் கேட்க, “நான் அளவோடு ரசிப்பவன்” என்று எம் எஸ் விஸ்வநாதன் கொடுத்த ஒரு அளவிற்கு நான் முதல் வரியை எழுதிவிட்டேன். அடுத்த வரியை எழுத யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என வாலி அவரிடம் கூற, சற்றும் யோசிக்காமல் “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று எழுத வேண்டியதுதானே என மு கருணாநிதியிடம் இருந்து பதில் வர, பின் பாடல் முழுவதையும் எழுதி முடித்தார் கவிஞர் வாலி.

அதன் பின்பு வேறொரு படப்பிடிப்புத் தளத்தில் கவிஞர் வாலியை சந்தித்த எம் ஜி ஆர், அவரை ஆரத் தழுவி கன்னத்தில் முத்தமிட, ஏதும் அறியாத கவிஞர் வாலி, எம் ஜி ஆரிடம் விபரம் கேட்க, “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று அந்தப் பாடலில் தனது குணநலன் பற்றி சிறப்பாக எழுதியிருந்ததை சிலாகித்து அவரிடம் எம் ஜி ஆர் சொல்ல, நீங்கள் இந்த முத்தத்தை கருணாநிதி அவர்களுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட வரியை கருணாநிதி அவர்கள் சொல்லித்தான் நானே எழுதினேன் என்ற உண்மையை எம் ஜி ஆரிடம் கூறியிருக்கின்றார் கவிஞர் வாலி.

நெகிழ்ந்து போன எம் ஜி ஆர், படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான “நான் செத்துப் பிழைச்சவன்டா எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்ற பாடலில், மு கருணாநிதி பங்கு கொண்ட கல்லக்குடி போராட்டத்தை நினைவு கூறி, அவரை சிறப்பிக்கும் வண்ணம் பாடலை அமைத்துத் தருமாறு எம் ஜி ஆர், கவிஞர் வாலியிடம் சொல்ல, அவ்வாறே அந்தப் பாடலின் ஒரு பல்லவியில்; “ஓடும் ரயிலை இடை மறித்து, அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துறும்பாய் தான் மதித்து, தமிழ் பெயரைக் காத்த கூட்டமடா” என்று கல்லக்குடி போராட்டத்தின் போது, தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய மு கருணாநிதி அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் எழுதச் செய்து, தனது நண்பருக்கு பதில் மரியாதை செய்திருந்தார் எம் ஜி ஆர்.
இப்படி எம் ஜி ஆர், கருணாநிதி என்ற இந்த இருபெரும் ஜாம்பவான்களின் பரஸ்பர நட்பின் ஆழத்தை அறியச் செய்த பாடல்களாக அமைந்ததோடு, என்றென்றும் அவ்விருவரையும் நினைவு கூறும் பாடல்களாகவும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. படத்தின் ஒரு காட்சியில் சி என் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகிய மூவரும் நடித்திருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !