50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா?
ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் எம்ஜிஆர், ராதா சலுஜா, ராஜசுலோச்சனா, ஆர்.எஸ்.மனோகர், பண்டாரி பாய், எஸ்.வி.ராமதாஸ், 'வெண்ணிற ஆடை' நிர்மலா, வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், 'தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்த ‛இதயக்கனி' படம் 1975ம் ஆண்டு வெளியானது.
எம்ஜிஆரின் மிகப்பெரிய வெற்றி படங்களில் இந்த படமும் ஒன்று. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபின் வெளிவந்த இந்த படத்தில் கட்சியின் சின்னம், கொடி, கொள்கை இந்த படத்தில் மறைமுகமாக இடம் பெற்று இருந்தன. குறிப்பாக, இதயக்கனியில் இடம் பெற்ற நீங்க நல்லா இருக்கணும் பாடல் இன்றும் அதிமுக மேடைகளில் ஒலிபரப்பாகிறது.
50 ஆண்டுகளுக்குபின் இதயக்கனி சென்னையில் ரீ ரிலீஸ் ஆனது. தினமும் ஒரு காட்சி என்ற அளவில் திரையிடப்பட்டாலும், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் இந்த படத்தின் 100வது நாள் விழா சென்னை காசி தியேட்டரில் கொண்டாடப்பட்டது. இப்போது 150 நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவுக்காக பல்வேறு ஊர்களில் இருந்து எம்ஜிஆர் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இப்போது புதுப்படங்கள் சில காட்சிகளே ஓடாத நிலையில், எம்ஜிஆரின் இதயக்கனி 150வதுநாளை கொண்டாட உள்ளது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.