புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல்
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அவர் நடித்து வெளிவரும் படங்களின் பாடல்கள், டீசர், டிரைலர்கள் ஏதோ ஒரு விதத்தில் சில சாதனைகளை படைப்பது வழக்கம்.
ஆனால், அவருக்குப் பிறகு பான் இந்தியா அந்தஸ்தைப் பெற்ற ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரது பாடல்கள் அதன்பின் புதுப்புது சாதனைகளை படைக்க ஆரம்பித்தன.
சமீபத்தில் ராம் சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்தின் முதல் சிங்கிளான 'சிக்ரி சிக்ரி' பாடல் 24 மணி நேரத்தில் 29 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்து புதிய சாதனையைப் படைத்தது. அதற்கடுத்த பத்து இடங்களிலும் மற்ற தெலுங்கு நடிகர்களின் பாடல்கள் உள்ளன.
பிரபாஸ் தற்போது நடித்து வரும் 'தி ராஜா சாப்' படத்தின் முதல் சிங்கிளான 'ரிபெல் சாப்' நேற்று முன்தினம் வெளியானது. 24 மணி நேரத்தில் அப்பாடல் 14.9 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ஸ்டார் அந்தஸ்தில் இல்லாத ராம் பொத்தினேனி நடித்து வர உள்ள 'ஆந்திரா கிங் தலுகா' படத்தின் 'சின்னி குண்டெலோ' பாடல் கூட 24 மணி நேரத்தில் 15 மில்லியனைக் கடந்துள்ளது.
மாருதி இயக்கும் 'தி ராஜா சாப்' படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படக்குழுவிற்கு இப்பாடல் புதிய சாதனை படைக்காதது ஒரு பின்னடைவுதான்.