பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை
தெலுங்கில் வெளிவந்த 'ஜெயிலு பக்ஷி' என்ற படத்தை தமிழில் 'சிறை பறவை' என்ற பெயரில் உருவாக்கினார்கள். இந்த படத்தை மனோபாலா இயக்கினார். விஜயகாந்த், ராதிகா, மலேசியா வாசுதேவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில், லட்சுமி, குழந்தை நட்சத்திரமாக ஷாலினி நடித்தனர். பி ஆர் விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்தார். இளையராஜா இசையமைத்தார்.
தெலுங்கு படமான 'ஜெயிலு பக்ஷி' யிலும் ராதிகாவே ஹீரோயினாக நடித்திருந்தார். சோபன் பாபு நாயகனாக நடித்திருந்தார். இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருந்ததால் ராதிகாவை சுற்றி கதை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் இந்த கதையில் எனக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை, அதனால் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
பின்னர் இயக்குனர் மனோபாலாவும் திரைக்கதை ஆசிரியர் கலைமணியும் விஜயகாந்த்தை சந்தித்து தமிழில் உங்களுக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று காட்சிகளை அமைத்து புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்று அவரை சமாதானப்படுத்தினார்கள்.
இதனால் ராதிகாவின் காட்சிகள் குறைக்கப்பட்டு விஜயகாந்தின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டது. விஜயகாந்த் ராதிகாவும் அப்போது நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இதற்கு ராதிகாவும் ஒப்புக்கொண்டு நடித்தார்.