அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல்
லிங்குசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் 2014ல் வெளியான 'அஞ்சான்' படத்தை ரீ எடிட் செய்து இன்று மீண்டும் வெளியிட உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால், காலை காட்சியில் படம் வெளியாகவில்லை. மதியக் காட்சியிலிருந்துதான் படத்தின் காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் முன்னர் பெற்ற கடன் தொகைக்கான சிக்கல் 'அஞ்சான்' படத்தின் ரீரிலீஸிலும் தொடர்ந்து நெருக்கியதாகச் சொல்கிறார்கள். இன்று மதியக் காட்சியில் சென்னையில் உள்ள திரையரங்கில் லிங்குசாமி மற்றும் குழுவினர் படம் பார்க்க வருகிறார்களாம். அப்போது இன்று ஏற்பட்ட சிக்கல் குறித்து லிங்குசாமி பேசுவார் என்கிறார்கள்.
ரீ எடிட் படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாகச் சொல்லி உள்ளார்கள். படத்தில் இடம் பெற்றிருந்த சூரியின் கதாபாத்திரத்தை அப்படியே மொத்தமாக 'கட்' செய்துவிட்டார்கள். ஒரிஜனல் படத்தில் இருந்த இடைவேளைக்குப் பிறகு, முன் காட்சிகளையும் மாற்றியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் சமூக வலைத்தளங்களில் முதன் முதலில் மிக அதிகமாக 'டிரோல்' செய்யப்பட்ட படம் 'அஞ்சான்' என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.