ஏவிஎம் சரவணன் உடல் தகனம்
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், 86, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்னையால் சென்னையில் இன்று (டிச.,04) காலமானார். 'ஏவிஎம்' என்ற அந்த மூன்றெழுத்து கனவுலக கலைக் கூடத்தை தனது சகோதரர்கள் உதவி உடன் கண்ணும் கருத்துமாக கட்டிக் காத்து, கடல் கடந்தும் அதன் பெருமைகளை எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்களில் முதன்மையானவர் சரவணன் என்றால் மிகையல்ல.
மறைந்த சரவணன் உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, விஷால், வசந்த், பிசிஸ்ரீராம், மணிரத்னம் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 3:30 மணிக்கு மேல் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அருகில் உள்ள ஏவிஎம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் அவரது குடும்பமுறைப்படி இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஏவிஎம் என்ற தங்களது மூன்றெழுத்து கனவுலக் கலைக்கூடத்தை புதுப்பித்துக் கொண்டே சென்று, வெற்றிக் கொடி நாட்டி, பணிவு, பண்பு, ஒழுக்கம் மற்றும் தன்னடக்கத்தை வாழ்நாள் இறுதிவரை ஓர் அங்கமாகவே கொண்டு வாழ்ந்து மறைந்த சரவணன் புகழ் மற்றும் அவர் உருவாக்கித் தந்த திரைக்காவியங்கள் மூலமாக என்றென்றும் நிலைத்திருப்பார்.