பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்”
வங்காள மொழி எழுத்தாளரான நிருபமா தேவி என்பவரின் “அன்னபூர்ணிகா மந்திர்” என்ற புகழ் பெற்ற நாவல், வங்காள மொழி மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் புத்தகங்களாக வெளிவந்திருந்தது. அவற்றில் மலையாள மொழி பெயர்ப்பை டி கே சண்முகம் குழுவினர் வாங்கி படித்து, அதை தமிழில் “குமஸ்தாவின் பெண்” என்ற பெயரில் மேடை நாடகமாக அரங்கேற்றி, திறம்பட நடத்தியும் வந்தனர்.
1940ம் ஆண்டு “குமஸ்தாவின் பெண்” என்ற இந்நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க டி கே எஸ் சகோதரர்கள் முனைப்பு காட்ட, நிதி உதவிக்காக 'ஜெமினி பிக்சர்ஸ்' அதிபர் எஸ் எஸ் வாசன் அவர்களை சந்தித்துப் பேச, படத்தின் விநியோக உரிமையை 'ஜெமினி பிக்சர்ஸ்' நிறுவனத்திற்குத் தருவது எனப் பேசி முடிவான பின், ஒப்பந்தம் செய்வதற்கு முன், தயாரிக்க இருக்கும் திரைப்படம் வெற்றி பெருமா? என்பதைக் கண்டறிய அந்நாடகத்தைப் பார்க்க விரும்பினார் எஸ் எஸ் வாசன்.
அப்போது ஈரோட்டில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்த இந்நாடகத்தை எஸ் எஸ் வாசன் நேரில் சென்று பார்த்தார். பின் கோவை பிரீமியர் சினிடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பும் ஆரம்பமானது. டி கே எஸ் குழுவில் முன்பு நடிகராக இருந்தவரும், இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கனிடம் உதவியாளராக பணிபுரிந்தவருமான கே வி சீனிவாசன்தான் படத்தின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். நாடகத்தில் கதையின் நாயகி 'சீதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பையனைப் போல், படத்தில் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகை எம் வி ராஜம்மா நடித்துவிட்டால் போதும் படம் அற்புதமாக அமைந்துவிடும் என்றார் எஸ் எஸ் வாசன். அவ்வாறு எஸ் எஸ் வாசன் புகழ்ந்து பாராட்டிய அந்தப் பையன் வேறு யாருமல்ல இயக்குநர் ஏ பி நாகராஜன்தான். அவர்தான் அந்த நாடகத்தில் நாயகி 'சீதா' வேடமேற்று நடித்திருந்தார்.
1941ம் ஆண்டு மே மாதம் 10 அன்று திரைப்படமாக வெளிவந்தது “குமஸ்தாவின் பெண்”. டி கே சண்முகம், டி கே பகவதி, எம் வி ராஜம்மா, எம் எஸ் திரவுபதி, ப்ரண்ட் ராமசாமி, சகுந்தலா, டி எஸ் ராஜலக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அன்றைய நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வெற்றியும் பெற்றது. இதே திரைப்படத்தின் கதையை, 33 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 'சி என் வி பிக்சர்ஸ்' என்ற பதாகையின் கீழ், அன்று நாடகத்தில் நாயகி வேடமேற்று நடித்திருந்த இயக்குநர் ஏ பி நாகராஜன் இயக்கி வெளியிட்ட திரைப்படம்தான் “குமஸ்தாவின் மகள்”.
1974ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் சிவகுமார், கமல்ஹாசன், ஆரத்தி, ஷகீலா, நாகேஷ், பண்டரிபாய், வி எஸ் ராகவன், டி கே பகவதி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படமும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற திரைப்படமாகவே அமைந்திருந்தது. காலங்கள் மாறினாலும், காட்சியில் தோன்றும் கலைஞர்கள் மாறினாலும், கதை மட்டும் காண்போரின் சிந்தையை கவருமேயானால் காலம் கடந்தும் ரசிக்கப்படும் என்பதற்கு ஓர் நல்லுதாரணம்தான் இந்த “குமஸ்தாவின் பெண்”.