பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா
கண்ணாம்பா என்றாலே தூய தமிழ் வசனங்களும், அவரது அம்மா கேரக்டருமே நினைவுக்கு வரும். ஆனால் அவர் கதை நாயகியாகவே ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுவும் ஒரு சரித்திர கதை படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அந்தப் படம் 'பெண்ணரசி'.
இந்த படத்தில் கண்ணாம்பா ஒரு நாட்டின் ராணியாக நடித்தார். ராணியை சதி செய்து கவிழ்த்து நாட்டை பிடிக்க நினைக்கும் ஒரு கூட்டத்திடமிருந்து அவர் நாட்டை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் கண்ணாம்பாவுக்கு வாள் சண்டையெல்லாம் இருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது பிரபல இயக்குனர் ஏ.பி.நாகராஜன். இவர்களுடன் கே.சூர்யகலா, பி.எஸ்.வீரப்பா, பி.ஆர்.சுலோச்சனா, எம்.என்.நம்பியார், ஈ.வி. சரோஜா, ஈ.ஆர்.சகாதேவன், வி.எம்.ஏழுமலை, சி.டி.ராஜகாந்தம், ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே. தேவர், எம்.ஏ.கணபதி, ஆர்.பக்கிரிசாமி, பி.கனகா, எஸ்.எம்.திருப்பதிசாமி மற்றும் எம்.கே.விஜயா ஆகியோர் நடித்தனர்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். 'சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்பஸ், பணம் பந்தியிலே, முதலாளி' படங்களை தயாரித்த எம்.ஏ.வேணு தயாரித்து இருந்தார். கே.சோமு இயக்கி இருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.