2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவின் உண்மையான நிலவரம், வெற்றி, தோல்விகள், ஒரு படத்தின் நிஜ ரிசல்ட் பற்றி வெளிப்படையாக பேசுபவர் திருப்பூர் சுப்ரமணியம். தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவரான இவர் அவ்வப்போது வெளியிடும் ஆடியோக்களும் திரைத்துறையில் வைரல் ஆகும்.
அந்த வகையில் நேற்று அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் ''தயாரிப்பாளர், தியேட்டர் சங்க உறுப்பினர்கள், வினியோகஸ்தர்களே. கடந்த 2 மாதமாக சினிமா நிலைமை மோசமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சில பெரிய படங்கள் வருகிறது. அடுத்து தேர்தல் வருகிறது. பெரிய படங்கள் இல்லை. குறிப்பாக, படத்தயாரிப்பே குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை உடனே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வகையில் விற்றுவிடுகிறார்கள். இதனால், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தியேட்டருக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்துவிட்டார்கள்.
ஒரு படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்யுங்கள் என்று எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்பது இல்லை. ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் சிலரின் பிடிவாதத்தால் இந்த நிலை. அந்த நாலைந்துபேரால் சினிமா நிலைமை கஷ்டமாக இருக்கிறது. இப்போது அவர்கள் படத்தையே ஓடிடியில் வாங்க மறுக்கிறார்கள். மற்ற மொழிகளை விட தமிழ் சினிமா நிலவரம் மோசமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களுக்கு பெரிய சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் இல்லை. வளரும் நடிகர்கள் சம்பளத்தை அதிகம் கேட்கிறார்கள். அதனால் பல தயாரிப்பாளர்கள் முக்கிய நகரங்களில் தான் படத்தை வெளியிடுகிறார்கள். சின்ன ஊர்களுக்கு படம் கிடைப்பது இல்லை. தியேட்டர்கள் மூடி வைக்க வேண்டிய நிலை. அதிக பிரிண்ட் போட்டால் எங்களுக்கு செலவு, வருமானம் வருவது இல்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆகவே, இப்படிப்பட்ட பிரச்னைகளை பேச, வரும் செவ்வாய்கிழமை ஆன்லைனில் மீட்டிங் போட்டு பேசுவோம். உங்களை பிரச்னைகளை பேசுங்க''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.