கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்?
வா வாத்தியார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கிர்த்தி ஷெட்டி, அந்த படம் குறித்து பேட்டி அளிக்கும்போது கோவை தமிழை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில் 'என் அம்மா கோவையில் வளர்ந்தார். இன்னமும் எனக்கு அங்கே நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். சின்ன வயதில் இருந்து அடிக்கடி கோவை வந்து செல்வேன். அந்த மக்கள் பேசும் தமிழ் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, அவங்க ரொம்ப மரியாதையாக பேசுவாங்க. அதை ரொம்பவே ரசிப்பேன்.
சின்ன வயதில் பாட்டி வீட்டுக்கு வரும்போது அம்மாவும், பாட்டியும் தமிழில் பேசிக் கொள்வார்கள். எனக்கு அப்போது தமிழ் தெரியாது, துளு மட்டுமே தெரியும். அவங்க எனக்கு தெரியாமல் சில விஷயங்களை ரகசியமாக பேச தமிழை பயன்படுத்துவார்கள். என் பாட்டி தமிழ் சீரியல்கள் அதிகம் பார்ப்பார்கள். நானும் அதை பார்த்து ஓரளவு தமிழ் கற்றுக் கொண்டேன். அதை தெரிந்து கொண்டே என் பாட்டி, ஒரு கட்டத்தில் என் முன்னால் தமிழ் சீரியல் பார்ப்பதையே நிறுத்திவிட்டார்.
எங்களின் பூர்வீகம் மங்களூர். ஆனாலும் நான் மும்பையில் வளர்ந்தேன். காந்தாரா படம் பார்த்து, எங்கள் கலாச்சாரம், என் முன்னோர்கள், எங்கள் தெய்வ நம்பிக்கை, கோயில் குறித்து அதிகமாக பெருமைப்பட்டேன். வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அவரை குறித்து, அவரின் நல்ல குணம், வள்ளல் தன்மை குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன். எம்ஜிஆர் படங்களின் எனக்கு அன்பே வா ரொம்ப பிடிக்கும்' என்றார்.