உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா?

தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா?

2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மோசமான ஒரு சூழலில் சிக்கத் தவித்து வருகிறது. பெரிதாக எதிர்பார்த்த படங்கள் சரியாக ஓடவில்லை, படுதோல்வியை சந்தித்தன. சில சிறிய படங்கள், எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான சில படங்கள்தான் வசூலையும், லாபத்தையும் கொடுத்துள்ளன.

வாராவாரம் நான்கைந்து படங்கள் வந்தாலும், அவற்றில் பல படங்கள் நல்ல கதைகளோ, ரசிகர்களுக்கு அறிமுகமான கலைஞர்களோ இல்லாத காரணத்தால் அப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை. முதல் நாள் முதல் காட்சிக்குக் கூட பல படங்கள், நடக்காத ஒரு சூழல்தான் உள்ளது. வேறு எந்த மொழிகளிலும் இப்படி ஒரு நிலையைப் பார்க்க முடியவில்லை.

குறிப்பாக சிங்கிள் தியேட்டர்களின் நிலைமைதான் மிகவும் மோசம் என்கிறார்கள். தமிழகத்தின் தலைநகரான, சினிமாவின் தலைமையிடமான சென்னையில் உள்ள பல சிங்கிள் தியேட்டர்கள் வாரத்திற்கே ஓரிரு காட்சிகள் மட்டுமே நடக்கும்படியான நிலையில் உள்ளன.

முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் கூட வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதிநாட்களில் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடிக்கின்றன. இந்த நிலை கடந்த ஓரிரு வருடங்களாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பல சிங்கிள் தியேட்டர்கள் மூடப்பட்டு திருமண மண்டபங்களாகவும் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறும் சூழல் உருவாகும் என வருத்தப்பட்டுச் சொல்கிறார்கள்.

2026ம் ஆண்டிலாவது சிங்கிள் தியேட்டர்களுக்கென ஏதாவது நடந்து அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என கோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !