உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தும் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது.

சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசின் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். நடிகை சிம்ரன், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது : சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா கேன்ஸ், வெனிஸ், ஜெர்மனி, டொரோண்டோ போன்ற புகழ்பெற்ற திரைப்பட விழாக்களின் வரிசையில் இணைந்து கம்பீரமாக திகழ்வதில் மகிழ்ச்சி. சுமார் 51 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 122 தலைசிறந்த படங்களை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விழா தரத்திலும் உலக விழாக்களுக்கு இணையானது. தென்கிழக்கு ஆசியாவில் மிகச்சிறந்த விழாக்களில் ஒன்றாக சென்னையில் நடைபெறும் இந்த விழாவை உயர்த்துவதே நமது இலக்கு.

இந்த ஆண்டு முதல் திரைப்பட விழா நிதி உதவி 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கான மானியம் 15 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி ஓவிய கண்காட்சி
நடிகர் ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையைக் குறிக்கும் ஓவிய கண்காட்சி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. 40 அடி உயரம் கொண்ட 50 சுவர் ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதனை நூறு ஓவியர்கள் இணைந்து வரைந்துள்ளனர். சென்னை, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இந்த கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !