வாசகர்கள் கருத்துகள் (3)
குரு சிஷ்யன், வேலைக்காரன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன் - எத்தனை தடவை பார்த்தாலும் போர் அடிக்காத தலைவர் படங்கள்
all the movies were mokkai. Nothing special. Taleever Sooper strange rasuni
அனைத்தும்
சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் 75 வயதை பூர்த்தி செய்துள்ளார். அதுமட்டுமல்ல சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். சினிமாவின் சிகரத்தை தொட்டிருக்கும் ரஜினி, அதை எளிதில் அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறித்தான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். இன்றைய ஸ்பெஷல் நாளில் அவரின் படையப்பா படம் 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகி உள்ளது.
ரஜினியின் வாழ்க்கை பாதையில் படிக்கட்டுகளாக அமைந்து அவரை உயர்த்தி பிடித்த சில படங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாமா...
அபூர்வ ராகங்கள்
திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த சிவாஜிராவை அடையாளம் கண்டு, இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய படம். காதலியை கைவிட்ட பாண்டியன் என்ற காதலன் கேரக்டரில் நடித்திருந்தார்.
மூன்று முடிச்சு
கே.பாலச்சந்தர் ரஜினியிடம் இருந்த சிகரெட் ஸ்டைலை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயக்கிய படம். நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் ஆன்டி ஹீரோ கேரக்டர். நண்பன் கமல்.
அவர்கள்
ரஜினியை முழு நடிகனாக காட்டிய படம். மனைவியை கொடுமைப்படுத்தும் சைக்கோ கேரக்டர். மனைவியாக சுஜாதாவும், மனைவியின் காதலனாக கமலும் நடித்திருந்தனர்.
புவனா ஒரு கேள்விக்குறி
ரஜினி - எஸ்.பி.முத்துராமன் கூட்டணி முதன்முதலில் இணைந்த படம். ‛ஜென்டில்மேன்' நடிகரான சிவகுமார் பெண் பித்தராக நடிக்க, ரஜினி நல்லவராக நடித்த படம்.
16 வயதினிலே
ரஜினி நடித்த முதல் வண்ணப்படம். கிராமத்து சப்பாணி கமல்ஹாசனை டார்ச்சர் செய்யும் சண்டியர் பரட்டை கேரக்டர். இது எப்படி இருக்கு? என்று முதல் பஞ்ச் டயலாக் பேசினார். படத்துக்கு வாங்கிய சம்பளம் 2500 ரூபாய்.
ஆடுபுலி ஆட்டம்
கொடூரமான வில்லனாக நடித்த படம். இது ரஜினி ஸ்டைல் என்ற பஞ்ச் டயலாக் பேசிய படம்.
ஆயிரம் ஜென்மங்கள்
விஜயகுமார் ஹீரோ. ரஜினி, ஹீரோயின் லதாவின் அண்ணன். ரஜினிக்கு ஜோடியும் கிடையாது டூயட்டும் கிடையாது.
பைரவி
ஸ்டைல் மன்னனாக இருந்த ரஜினி. சூப்பர் ஸ்டாரான படம். பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு. இந்தப் படத்துக்காக ரஜினியின் 30 அடி கட்அவுட் வைத்தது அன்றைக்கு ஹாட் டாபிக்
இளமை ஊஞ்சலாடுகிறது
ரஜினியை வைத்து ஸ்ரீதர் இயக்கிய முதல் படம். ஜாலியான பணக்கார வீட்டு பிள்ளையாக நடித்திருந்தார்.
முள்ளும் மலரும்
தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது என்று ரஜினி சொல்லும் படம். தங்கை மீது வெறித்தனமான பாசம் கொண்ட அண்ணன் கேரக்டர். ரஜினிக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் இயக்கிய படம்.
ப்ரியா
ரஜினி நடிப்பில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். எழுத்தாளர் சுஜாதாவின் கதை. எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்திருந்தார். ஹீரோயின் ஸ்ரீதேவியின் வழக்கறிஞராக நடித்திருந்தார். பாடல்களுக்காகவே ஹிட்டான படம்.
நினைத்தாலே இனிக்கும்
கமல் நடத்தும் இசை குழுவில் கிடாரிஸ்டாக நடித்திருந்தார். சின்ன சின்ன திருட்டு செய்கிற மேனரிசம் கொண்ட கேரக்டர். பாட்டுக்காக ஓடிய படம். ரஜினி காமெடியனாக நடித்த முதல் படம்.
ஆறிலிருந்து 60 வரை
ரஜினியின் ஆக்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்த படம். அச்சகத்தில் வாழ்க்கையை துவங்கி பெரிய எழுத்தாளனாக வாழ்ந்து மறைந்த ஒருவனின் முழுநீள வாழ்க்கை கதை. இந்த படத்துக்காக பல விருதுகளை பெற்றார்.
பில்லா
ரஜினியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம். பில்லா என்ற தாதாவாகவும், தெருப்பாடகன் ராஜப்பாகவும் நடித்து கலக்கிய படம். பாலாஜி தயாரித்தார். கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். இதன் ரீ-மேக்கும், இரண்டாம் பாகமும் பின்னாளில் அஜித் நடிப்பில் வெளியானது.
ஜானி
மகேந்திரனின் இயக்கத்தில் 2வது படம். இதில் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான மீசையுடன் சலூன் கடை நடத்தும் வித்யாசாகராக ரஜினி நடித்தது கவர்ந்தது.
முரட்டுக்காளை
அடிக்கடி தலைமுடியை கோதிக்கொண்டு ஸ்டைல் பண்ணும் ரஜினி, முதன் முறையாக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் நான்கு சகோதர்களுக்கு அண்ணனாக நடித்தார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகள் பிரபலம்.
தில்லு முல்லு
ரஜினி நடித்த முழு நீள காமெடி படம். முதன் முறையாக தனது அழகான மீசையை எடுத்துவிட்டு நடித்திருந்தார். ஹிந்தி கோல்மால் படத்தின் ரீமேக். பாலச்சந்தர் டைரக்டர்.
நெற்றிக்கண்
அப்பா - மகன் என்ற இரண்டு கேரக்டர். இதில் பெண் பித்தனாக, தொழில் அதிபர் சக்ரவர்த்தி என்ற அப்பா கேரக்டரில் நடிப்பு பின்னியிருப்பார். நடிகை லட்சுமியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார்.
எங்கேயோ கேட்ட குரல்
அப்போது உச்சத்தில் இருந்த அம்பிகா, ராதாவுடன் நடித்த படம். ஒழுக்கமும், நேர்மையும் மிக்க கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். ஒழுக்கம் தவறிய முதல் மனைவிக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, இரண்டாவது மனைவியுடன் ஊரைவிட்டே செல்லும் அற்புதமான கதை. ஒரு முழுமையான நடிகனாக ரஜினி பரிமாணம் பெற்ற படம்.
மூன்று முகம்
முதன் முறையாக 3 கேரக்டர்களில் நடித்த படம். போலீஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் ரஜினியை தூக்கி நிறுத்தியது. அவரது நடையும், ஸ்டைலும் பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.
அன்புள்ள ரஜினிகாந்த்
ரஜினி, ரஜினியாகவே நடித்த படம். ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வாழும் ஒரு குழந்தை மீது அன்பு செலுத்தும் நடிகராக நடித்திருந்தார். குழந்தையாக நடித்திருந்தவர் மீனா.
ஸ்ரீராகவேந்திரர்
ரஜினியின் 100வது படம். அவர் தனது ஆன்மீக குருவாக ஏற்றிருந்த ஸ்ரீராகவேந்திரராக நடித்திருந்தார். ரஜினி நடித்த முதல் பக்தி படம். ரஜினியை அறிமுகம் செய்த பாலசந்தர் தயாரித்தார்.
படிக்காதவன்
நடிகர் திலத்துடன் நடித்த முக்கியமான படம். அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட படம்.
மாவீரன்
ரஜினி தயாரித்த முதல் படம். இந்திய குத்துச்சண்டை வீரர் தாராசிங் ரஜினியுடன் நடித்திருந்தார்.
மாப்பிள்ளை
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தயாரிக்க, ரஜினி நடித்த படம். மாமியார் மருமகனுக்கு இடையில் நடக்கும் பனிப்போர் கதை. மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா
தளபதி
மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடித்த படம். தாதா மம்முட்டிக்கு விசுவாசம் மிக்க தளபதியாக ரஜினி நடித்திருந்தார். மணிரத்னம் டைரக்ட் செய்திருந்தார்.
மன்னன்
சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி நடித்த படம். திமிர் பிடித்த பணக்கார மனைவியை அடக்கும் ஏழை இளைஞனின் கதை. மனைவியாக விஜயசாந்தி நடித்திருந்தார். இயக்கியவர் பி.வாசு.
அண்ணாமலை
பணக்கார நண்பனின் பணத்திமிரை தன் உழைப்பால் அடக்கிய ஒரு பால்காரனின் கதை. குஷ்பு முதன் முறையாக ஜோடியாக நடித்திருந்தார். நண்பனாக சரத்பாபு நடித்திருந்தார்.
எஜமான்
நேர்மையும், நீதியும் கொண்ட கிராமத்து பெரிய மனுஷனாக நடித்த படம். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா இதில் ரஜினிக்கு ஜோடி. இதில் ரஜினியின் துண்டு ஸ்டைல் மிகவும் பிரபலம்.
வீரா
சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டு பெண்களை மணந்து கொண்டு தவிக்கும் காமெடி கேரக்டரில் நடித்த படம். ரோஜா, மீனா இரண்டு மனைவிகளாக நடித்திருந்தனர்.
அருணாச்சலம்
தன் வாழ்க்கைக்கு பல்வேறு கட்டங்களில் உதவிய நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்த படம்.
பாட்ஷா
ஒரு ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதும் உதாரணமாக சொல்லப்படுகிற படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கம் செய்திருந்தார். மும்பை டானாகவும், ஆட்டோ டிரைவராகவும் ரஜினி அதகளம் பண்ணிய படம்.
முத்து
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம். ஜமீன் வாரிசான ரஜினி, அங்கு வேலை செய்யும் சாதாரண வேலைக்காரனாக நடித்த படம். இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஜப்பானில் ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்த முதல் படம்.
படையப்பா
திமிர் பிடித்த ஒரு பெண்ணை அவளை எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் திருத்த முயற்சிக்கும் ஆணின் கேரக்டர். அந்த பெண்ணாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். வித்தியாசமான கதை கொண்ட படம். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம்.
பாபா
ஆன்மிகத்தில் ஈடுபாடில்லாத இளைஞனை தாய், ஆன்மிகத்தை நோக்கி திரும்ப வைக்கும் படம். ரஜினி மிகவும் எதிர்பார்த்த படம். பெரிய அளிவில் ஹிட்டாகவில்லை.
சந்திரமுகி
தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமை பெற்ற படம். சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படம். சிவாஜி பிலிம் தயாரித்தது. பி.வாசு இயக்கியது. இதில் இடம் பெற்ற வேட்டைய மகராஜா கேரக்டரும், லகலகலகலக சிரிப்பும் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.
சிவாஜி
உயர்ந்த லட்சியத்துக்காக கோடிகளை இழந்தாலும் ஒரு ரூபாய் மூலதனத்தில் இழந்ததை மீட்கும் இளைஞனின் கதை. ஷங்கர் இயக்கம். ஏவிஎம் தயாரிப்பு
எந்திரன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி இரண்டு வேடங்களில் நடித்த படம். ஹீரோ விஞ்ஞானி, வில்லன் ரோபோ என இரண்டு கேரக்டர்களில் நடித்து அசத்தினார்.
கோச்சடையான்
மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 3டி அனிமேஷன் படம்.
கபாலி
உடல் சுகவீனம், அனிமேஷன் ரஜினி என வருத்தப்பட்ட ரசிகர்களை மீண்டும் குஷியாக்கிய படம். மலேசியாவில் தமிழக டானாக ரஜினி நடித்தார். ரஞ்சித் இயக்கினார். விமானங்களில் எல்லாம் கபாலி என விளம்பரப்படுத்தப்பட்ட படம்.
2.0
‛எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக மீண்டும் ஷங்கர் - ரஜினி கூட்டணியில் வெளியான படம் இது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிக பட்ஜெட் மற்றும் முழு நீள 3டி படம் இது.
பேட்ட
கார்த்திக் சுப்பராஜ் ஒரு ரசிகனாக ரஜினியை ரசித்து இயக்கிய படம். நண்பனின் குழந்தையை காப்பாற்ற மீண்டும் காளியாக அதிரடி காட்டிய படம்.
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‛ஜெயிலர்'. மகனை காப்பாற்ற போராடும் தந்தை ஒருக்கட்டத்தில் மகனே குற்றவாளி என தெரிந்தும் மகனையே கொல்லும் கதை. மாஸான ஆக்ஷன் காட்சிகள் உடன் வெளியான இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான மற்றுமொரு அதிரடியான ஆக் ஷன் படம் கூலி. நிறைய விமர்சனங்களை சந்தித்ததாலும் இந்தாண்டில் 600 கோடி எனும் அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது.
இதில் உங்களுக்கு பிடித்த படங்களை அல்லது இதில் விடுபட்ட மற்ற படங்கள் இருந்தால் அதை கமென்ட்டில் சொல்லுங்க...
குரு சிஷ்யன், வேலைக்காரன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன் - எத்தனை தடவை பார்த்தாலும் போர் அடிக்காத தலைவர் படங்கள்
all the movies were mokkai. Nothing special. Taleever Sooper strange rasuni
அனைத்தும்