நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் 75 வயதை நிறைவு செய்துள்ளார். அதேப்போல் இந்தாண்டு அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும் அவர் நடித்து வெளியான ‛படையப்பா' படம் 25 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த மூன்று நிகழ்வுகளையும் அவரது ரசிகர்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினார்.
நேற்றைய தினம் ரஜினி ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருந்ததாக சொன்னார்கள். இதனால் அவரை அவரது இல்லத்தில் காண இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் ரஜினியின் மனைவி லதா ரசிகர்களின் வாழ்த்து பெற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார். இந்நிலையில் ரஜினி திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதிகாலை கோயிலுக்கு சென்ற அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, பேரன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்ட குடும்பத்தினரும் சென்று வழிபட்டனர். படையப்பா ரீ ரிலீசில் வசூல் ஈட்டி வருவதால் ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.