உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து

பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து

கேரளாவில் கடந்த 2017ம் வருடம் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானார். அது வீடியோவாகவும் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு அப்போது மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திலீப் உள்ளிட்ட நால்வர் இந்த வழக்கில் குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். முதன்மை குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட மீதி ஆறு பேருக்கு ஐம்பதாயிரம் அபராதமும் 20 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இத்தனை வருடங்கள் குரல் கொடுத்து வந்த பலருக்கும் குறிப்பாக நடிகைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த பாதிக்கப்பட்ட நடிகையின் சார்பாக எப்போதுமே குரல் கொடுத்து வந்த மலையாள டப்பிங் கலைஞரும் நடிகையுமான பாக்கியலட்சுமி இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, “குற்றவாளிகளுக்கு வெறும் 20 வருட சிறை தண்டனை தான். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை தான் ஆயுள் முழுவதும் மானசீகமான தண்டனையை அனுபவிக்க போகிறார். என்ன விதமான அநீதி இது ? எதை அர்த்தப்படுத்துகிறது ? குற்றவாளிகளின் வயது, அவர்கள் வாழ்க்கை, அவர்களது பெற்றோர் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அப்படியானால் பாதிக்கப்பட்டவருக்கு அம்மா இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? வயது இல்லையா ? இது அநீதி. ஏற்றுக்கொள்ளவே முடியாதது” என்று கூறியுள்ளார். அதேபோல நடிகை பார்வதியும் இந்த தீர்ப்பை விமர்சித்து பெண்கள் வாழ்வதற்கு என எந்த ஒரு நாடும் இல்லை என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !