இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி
மலையாளத்தில் பாவனா நடித்த 'அனோமி' படம், கடந்த மாதம் வெளியாகி அங்கே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நாளை ரிலீஸ் ஆகிறது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பாவனா மற்றும் இது அவர் நடித்த 90வது படம் என்பதால் சென்னைக்கு வந்திருந்து நிருபர்களிடம் பேசினார் பாவனா.
அவர் பேசுகையில் ''கேரளாவில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரியாஸ் மரத் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவர் புதுமுக இயக்குனர் என்றாலும் படத்தின் கதை, திரைக்கதை, கிளைமாக்ஸ், சொல்லப்படும் விஷயங்களுக்காக அங்கே ஹிட்டாகி உள்ளது. எனக்காக அவர் கதை எழுதவில்லை. அந்த கதைக்கு நான் செட்டானேன். முழு ஸ்கிரிப்ட் படித்துவிட்டு நடிக்க ஆரம்பித்தேன். இந்த படக்குழு குவாலிட்டி, உழைப்பு பிடித்து இருந்தது. ஒரு ஷெட்யூல் முடிந்த பின்னர்தான் நானும் தயாரிப்பாளராக இணைந்தேன்.
முன்பு காதல், டூயட், ஹீரோ என்ற ரீதியில் சினிமா இருந்தது. இப்போது மாறிவிட்டது. 'லோகா, அனோமி' மாதிரியான படங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த படத்தை ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என்று சொல்லமாட்டேன். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம். போலீஸ் அதிகாரியாக ரகுமான் நன்றாக நடித்துள்ளார். தொடர்ச்சியாக இந்த மாதிரி படங்களிலும் நடிப்பேன்.
தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிக்க ரெடி. மலையாளம், கன்னட படங்களில் பிஸியாகிட்டேன். தமிழை புறக்கணிக்கவில்லை. இது என்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் என்று சொல்ல மாட்டேன். நல்ல டீமுடன் இணைந்து இந்த படம் பண்ணியிருக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் என்று பார்த்து நடிப்பதை விட கதைகளுக்கு, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன். ஒரு நல்ல கதைக்கு 6 மாதங்கள் கூட காத்திருப்பேன். மீண்டும் காதல் கதைகளில் நடிக்கவும் ரெடி. அதை இயக்குனர்கள்தான் யோசிக்கணும்'' என்றார்.
அனோமி என்றால் சமூகத்துக்கு எதிரான மனநிலையில் இருப்பது அல்லது அனோமி என்பது சமூகக் கட்டுப்பாடுகள் தளர்ந்து, மக்கள் எதைப் பின்பற்றுவது என்று தெரியாமல் குழப்பமடைந்து, இலக்கின்றித் தவிக்கும் மனநிலை மற்றும் சமூகச் சூழல் என அர்த்தமாம். தமிழில் 150க்கும் அதிகமான தியேட்டர்களில் அனோமி நாளை ரிலீஸ் ஆக உள்ளது.