உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட்

தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட்

போயாபதி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் ஆகி பான் இந்தியா படமாக வெளியானது. மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தெலுங்கில் 70 கோடி வரையிலும் மற்ற மொழிகளில் 15 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. நாயகன் பாலகிருஷ்ணா, இயக்குனர் போயபதி சீனு, இசையமைப்பாளர் தமன் மற்றும் பிரபல தயாரிப்பாளர், வினியோகஸ்தர் தில் ராஜு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் வெளியீடு டிசம்பர் 5ம் தேதியிலிருந்து டிசம்பர் 12ம் தேதிக்குத் தள்ளிப் போனது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன்பு வாங்கியிருந்த கடன் தொகை காரணமாக நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதன் பின்பு பேச்சுவார்த்தை நடந்து ஒரு முடிவு எட்டப்பட்டு நீதிமன்றத்தில் முறையிட்ட பின் தடை நீக்கப்பட்டு படம் வெளியானது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் மீது பாலகிருஷ்ணா கோபத்தில் இருந்ததாகவும் அதனால்தான் அவர்கள் நேற்றைய சக்ஸஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !