பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு
எம்ஜிஆரும், கருணாநிதியும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். பின்னர் அரசியல் களத்தில் எதிர் எதிரே நின்றார்கள். எம்ஜிஆர் தேர்தலில் ஜெயித்து முதல்வராக இருந்தார். கருணாநிதி எதிர்கட்சி தலைவராக இருந்தார். இப்படியான சூழ்நிலையில் 1987ம் ஆண்டு வெளிவந்த படம் 'நீதிக்கு தண்டனை'.
இந்த படத்திற்கு வசனத்தை கருணாநிதி எழுதுவதாக இருந்தது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
படத்திற்கு முதலில் 'இது நியாயமா?' என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டது. கருணாநிதி சிறையில் அடைக்கபட்டதால் அவர் சிறையில் இருக்கும் படத்தை போட்டு படத்தின் தலைப்பை 'நீதிக்கு தண்டனை' என்று மாற்றி படத்திற்கு முழுபக்க விளம்பரம் கொடுத்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
கருணாநிதி சிறையில் இருந்து கொண்டே படத்திற்கான வசனத்தை எழுதிக் கொடுத்தார். இந்தப் படத்தில் எம்ஜிஆரை தாக்கி ஏராளமான வசனங்கள் இருந்தது. படம் வெளியானால் எம்ஜிஆர் ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம், அதனால் படத்தை வெளியிட தடை விதிக்க கேட்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. படமும் வெளிவந்தது, எதிர்பார்த்த மாதிரி எந்த பிரச்னையும் எழவில்லை. படமும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்தில் ராதிகா, நிழல்கள்ரவி, சரண்ராஜ், ஸ்ரீவித்யா, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.