உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஓஜி' இயக்குனருக்கு பவன் கல்யாண் கார் பரிசளித்தது ஏன்?

'ஓஜி' இயக்குனருக்கு பவன் கல்யாண் கார் பரிசளித்தது ஏன்?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'ஓஜி'. இளம் இயக்குனரான சுஜித் இயக்கிய அந்தப் படம் 300 கோடி வசூலைக் கடந்து ஓடியது. சில தினங்களுக்கு முன்பு, இயக்குனர் சுஜித்திற்கு பவன் கல்யாண் 'லேண்ட் ரோவர் டிபெண்டர்' கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதைப் பெற்ற பின் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் இயக்குனர் சுஜித்.

அவருக்கு பவன் கல்யாண் அந்த காரை ஏன் பரிசாக வழங்கினார் என்பதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. 'ஓஜி' படத்திற்கான சில முக்கிய காட்சிகளை ஜப்பான் நாட்டில் படமாக்க நினைத்தாராம் இயக்குனர் சுஜித். ஆனால், தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட்டைக் காட்டி அதற்கு மறுத்துவிட்டதாம். இருந்தாலும் தான் நினைத்ததைப் படமாக்க வேண்டும் என்று நினைத்த சுஜித், அவரிடமிருந்த 'லேண்ட் ரோவர் டிபெண்டர்' காரை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ஜப்பான் சென்று அவர் எடுக்க நினைத்த காட்சிகளை எடுத்து வந்தாராம்.

சுஜித்தின் இந்த அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி டப்பிங் பேசிய போது தெரிந்து கொண்ட பவன் கல்யாண், புதிதாக 'லேண்ட் ரோவர் டிபெண்டர்' கார் ஒன்றை வாங்கி அதை சுஜித்திற்குப் பரிசளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !