2025 இந்தியாவின் முதல் நாள் ஓபனிங் : முதலிடத்தில் 'கூலி'
2025ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் வசூலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள படங்கள் மூலம் மட்டும் சுமார் 5000 கோடி வசூலாகியுள்ளது. அவற்றில் கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் 850 கோடி வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 'ச்சாவா' ஹிந்திப் படம் 800 கோடி வசூலை நெருங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 'துரந்தர்' படம் 800 கோடியை நெருங்கி வருகிறது. விரைவில் 'ச்சாவா' வசூலை முறியடித்து இரண்டாமிடத்தில் சென்றுவிடும்.
தமிழ்ப் படமான 'கூலி' 600 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. மொத்த வசூலில் இந்திய அளவில் இப்படம் தற்போது 5வது இடத்தில் இருக்கிறது. இருந்தாலும் வெளியான முதல் நாள் வசூலில் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் இருக்கிறது.
முதல் நாள் வசூலாக 'கூலி' படம் 151 கோடியை வசூலித்தது. மொத்த வசூலில் தற்போது முதலிடத்தில் இருக்கும் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் முதல் நாள் வசூல் 87 கோடி மட்டும்தான். முதல் நாள் வசூலில் தெலுங்குப் படமான 'ஓஜி' படம் 145 கோடியுடன் இரண்டாமிடத்திலும், மற்றொரு தெலுங்குப் படமான 'கேம் சேஞ்ஜர்' 90 கோடி வசூலுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறது.
ஆனால், இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என்று அறிவிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் படுதோல்வியே அதற்குக் காரணம். அடுத்தடுத்த நாட்களில் ஓடாத படம் முதல் நாளில் எப்படி இப்படி வசூலைப் பெற்றது என பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கடுத்த நாட்களில் எந்த வசூல் அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் பொய்யான வசூலைத் தருகிறார்கள் என ரசிகர்கள் குற்றம் சாட்டியதால் தற்போது அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்புகளையும் நம்பமுடிவதில்லை.