உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி”

பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி”


ஆளுமை மிக்க ஆண் குரலாக ஆறு தசாப்தங்களுக்கும் மேல் தமிழ் திரையிசையை தனது கந்தர்வக் குரலின் கட்டுக்குள் வைத்திருந்தவரும், எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரு பெரும் ஜாம்பவான்களின் குரலாகவே பயணித்து வந்தவருமான பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜன், ஆரம்ப காலங்களில் “கிருஷ்ண பக்தி”, “மந்திரி குமாரி” போன்ற ஒரு சில திரைப்படங்களில் ஓரிரு பாடல்களைப் பாடி, தமிழ் திரையிசையில் தனது பங்களிப்பை காட்டியிருந்தாலும், அவரை ஒரு முதன்மை பின்னணிப் பாடகராக அடையாளம் காட்டிய திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “தூக்கு தூக்கி”.

மேடை நாடகமாக அரங்கேறி, பின் சினிமா வடிவம் பெற்ற இந்தக் கதை, 1935ம் ஆண்டிலேயே இதே பெயரில் சி வி வி பந்துலு, கே டி ருக்மணி ஆகியோரின் நடிப்பில் சினிமாவாக வெளிவந்திருந்தது. மீண்டும் 19 ஆண்டுகளுக்குப் பின் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி எஸ் பாலையா ஆகியோரின் நடிப்பில் 1954ம் ஆண்டும் அதே பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. “கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் தந்தால் தங்கை, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன்” என்ற பழமொழிகள்தான் இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பின்னணி பாடுவதற்காக பாடலாசிரியர் அ மருதகாசியின் சிபாரிசின் பேரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் டி எம் சவுந்தரராஜன். 1952ம் ஆண்டு தனது முதல் திரைப்படமான “பராசக்தி”யில் தனக்காக பின்னணி பாடிய சி எஸ் ஜெயராமனே இத்திரைப்படத்திலும் தனக்காக பாடவேண்டும் என்பது நடிகர் சிவாஜிகணேசனின் விருப்பமாக இருந்து வந்த நிலையில், பாடகர் டி எம் சவுந்தரராஜன் படத்தின் தயாரிப்பாளர்களிடம் மூன்றே மூன்று பாடல்களை மட்டும் இத்திரைப்படத்திற்காக தன்னைப் பாட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அதன்பின் அந்தப் பாடல்கள் நடிகர் சிவாஜிகணேசனுக்குப் பிடிக்காமல் போகும் பட்சத்தில் தானே வெளியேறிவிடுவதாக சொன்ன பின்பு பாடல்கள் பதிவு செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட பாடல்களைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன், டி எம் சவுந்தரராஜன் குரலால் வெகுவாக ஈர்க்கப்பட்டதோடு, படத்தின் அனைத்துப் பாடல்களையும் அவரையே பாட வைக்கவும் ஒப்புக் கொண்டார். “ஏறாத மலைதனிலே”, “சுந்தரி சவுந்தரி நிரந்தரியே”, “பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே”, “அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு”, “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”, “கண்வழி புகுந்து கருத்தில் கலந்த” என்று படத்தின் அத்தனைப் பாடல்களும் டி எம் சவுந்தரராஜன் குரலில் பதிவு செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்தத் திரைப்படத்திற்குப் பின் தமிழ் திரையிசையின் தவிர்க்க முடியாத குரலாக ஓங்கி ஒலித்ததோடு, எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியின் குரலாகவே வாழ்ந்தவர்தான் நம் 'இசையரசர்' டி எம் சவுந்தரராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !