உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: “சத்யா மூவீஸ்” திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்

பிளாஷ்பேக்: “சத்யா மூவீஸ்” திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்


தமிழ் திரையுலகின் பொற்காலம் என்றால் அது எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரும் திரை ஆளுமைகள் கோலோச்சியிருந்த காலங்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. அழுத்தமான கதைக்களங்களுடன் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்றால், நல்ல கருத்துக்களை உள்ளடக்கி, சண்டைக் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து நடித்து வந்தவர்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.

எம் ஜி ஆருக்கு ஒரு தேவர் என்றால், சிவாஜிக்கு ஒரு கே பாலாஜி. சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் எப்படி சிவாஜியை வைத்து படம் தயாரிக்கவில்லையோ, அதுபோல் கே பாலாஜியும் எம் ஜி ஆரை வைத்து படமே தயாரித்ததில்லை. இந்த இருபெரும் நட்சத்திரங்களின் ரசிகர்களுக்குள் அப்போது போட்டி இருந்து வந்தாலும், தனிப்பட்ட இவ்விருவரின் வாழ்வில் போட்டி என்ற வார்த்தைக்கே இடமின்றி, உயரிய நட்பை இறுதிவரை பேணிக் காத்தே வந்தனர்.

அந்த வகையில் எம் ஜி ஆரை வைத்தே பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த ஒரு தயாரிப்பு நிறுவனம்தான் ஆர் எம் வீரப்பனின் “சத்யா மூவீஸ்”. “தெய்வத்தாய்”, “நான் ஆணையிட்டால்”, “காவல்காரன்”, “கண்ணன் என் காதலன்”, “ரிக்ஷாக்காரன்”, “இதயக்கனி” என எம் ஜி ஆரை நாயகனாக வைத்தே படங்களைத் தயாரித்து வந்த இந்நிறுவனம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தயாரித்த ஒரு திரைப்படம்தான் “புதிய வானம்”.

1987ம் ஆண்டு நடிகர் தர்மேந்திரா, ரத்தி அக்னிஹோத்ரி நடிப்பில் வெளிவந்த “ஹூக்குமத்” என்ற இந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமாக வெளிவந்த இத்திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 275வது திரைப்படம் என்ற தனித்துவத்தோடு வந்ததுமட்டுமின்றி, “சத்யா மூவீஸ்” தயாரிப்பு நிறுவனத்திற்காக சிவாஜிகணேசன் நடித்துக் கொடுத்த ஒரே திரைப்படமாகவும் அமைந்திருந்ததுதான் கூடுதல் சிறப்பு.

எம் ஜி ஆர் மறைந்து ஓராண்டு கழித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் சிவாஜிகணேசனும், சத்யராஜும் பாடுவதாக வரும் ஒரு பாடல்தான் “ஒரு பாடல் சொல்கிறேன் புதுப் பாடம் சொல்கிறேன்” என்ற பாடல். இந்தப் பாடலின் சரணத்தில் “எளிமையும் மனப் பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை” என வரும் பாடல் வரிகளுக்கு வாயசைத்து நடித்திருந்தது நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அந்தக் குறிப்பிட்ட பாடல் வரிகளுக்கு உதட்டசைவு தந்து நடித்திருந்ததோடு, எம் ஜி ஆரைப் போலவே கை அசைத்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்திருந்தது வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருந்தது என்பதையும் தாண்டி, அந்த இரண்டு ஜாம்பவான்களுக்குள்ளும் இருந்த நட்பின் ஆழத்தையும் அறியச் செய்திருந்தது என்பதுதான் உண்மை.

மேலும் படத்தின் நாயகனாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நடிகர் சத்யராஜின் கதாபாத்திரத்தின் பெயர் கூட எம் ஜி ஆரை நினைவு கூறும் வண்ணமே எம் ஜி ராஜரத்தினம் என வடிவமைத்திருப்பார் படத்தின் இயக்குநரான ஆர் வி உதயகுமார். 1988ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாகவும் அமைந்திருந்தது இந்த “புதிய வானம்”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !