தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை
பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இவரது மரணத்திற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் சீனிவாசனுக்கு வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவருமே மலையாள சினிமாவில் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக இருக்கின்றனர். தந்தையின் மரணத்திற்கு விசாரிக்க வந்தவர்களை வினித் சீனிவாசன் எதிர்கொண்டு அவர்களது ஆறுதல்களை பெற்றுக் கொண்டார்.
ஆனால் தியான் சீனிவாசன் தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி அவரது உடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் அவர் வந்ததை கண்டு கொள்ளாமல் ஒரு சம்பிரதாயத்திற்கு கூட எழுந்து நின்று மரியாதை தராமல் தியான் சீனிவாசன் நாற்காலியில் அமர்ந்திருந்தது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாநிலத்தின் முதல்வரே ஒரு வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும்போது அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பது தானே முறை என்று பலரும் தியான் சீனிவாசனின் செயலை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் தனக்குப் பிரியமான ஒருவரின் உடல் உயிர் இல்லாமல் இருப்பதை பார்த்து சிலருக்கு சுற்றி என்ன நடக்கிறது என்றும் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதும் கூட சரியாக தெரியாது. அவர்கள் நினைவு எல்லாம் இறந்து போனவர்களை சுற்றி இருக்கும். அப்படி ஒரு மனநிலையில் தான் தந்தை இறந்த தாக்கத்தில் தியான் சீனிவாசன் அப்படி அமர்ந்திருந்தார். இந்த விஷயத்தில் அவரை குறை சொல்ல தேவையில்லை என்று அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.