உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு”

பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு”


நடிகர் சிவகுமார் முதன்மைக் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்திருந்த 1970களின் ஆரம்ப காலங்களில் வெளிவந்த அவரது குறிப்பிடும்படியான திரைப்படங்களில் ஒன்றுதான் “பொண்ணுக்கு தங்க மனசு” என்ற திரைப்படம். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாக இவரது “பொண்ணுக்கு தங்க மனசு” திரைப்படத்தை குறிப்பிடலாம்.

இன்னும் குறிப்பிடும்படியாக சொல்லவேண்டும் என்றால், எம் ஜி ஆரின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டங்களிலேயே வெளிவந்து, ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்ததோடு, சில புதுமுகங்களை கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தும் புதுமை படைத்திருந்தது இந்த “பொண்ணுக்கு தங்க மனசு” திரைப்படம்.

'இசைஞானி' இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அன்னக்கிளி” திரைப்படத்தை இயக்கிய தேவராஜ்-மோகன் என்ற இயக்குனர்களை திரையுலகிற்கு இயக்குனர்களாக அறிமுகம் செய்து வைத்த திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “பொண்ணுக்கு தங்க மனசு”. மேலும் நடிகர் விஜயகுமாரை இரு நாயகர்களில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்ததும் இத்திரைப்படமே. படத்தின் இரு நாயகியரில் ஒருவரான நடிகை விதுபாலா நாயகியாக அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே. இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷின் உதவியாளராக 'இசைஞானி' இளையராஜா பணியாற்றிய திரைப்படமாகவும் அமைந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

குறிப்பாக “தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே” என்ற பாடலும், “தஞ்சாவூரு சீமையிலே” என்ற பாடலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாடல்களாக அமைந்திருந்தன. “தஞ்சாவூரு சீமையிலே” என்ற பாடலை எழுதியதன் மூலம் முத்துலிங்கம் என்ற ஒரு முத்தான கவிஞரும் தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் இத்திரைப்படத்தின் வாயிலாக. இவை தவிர, “தஞ்சாவூரு சீமையிலே” என்ற இந்த ஒரு பாடலுக்கு மட்டும் மெட்டமைத்திருந்தது 'இசைஞானி' இளையராஜா என்ற ஒரு கூடுதல் தகவலும் உண்டு.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஆஸ்தான கதாசிரியர்களில் ஒருவரான பாலமுருகன் கதை வசனம் எழுத, சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் பி மாதவன் தயாரிக்க, சிவகுமார், ஜெயசித்ரா, விஜயகுமார், விதுபாலா ஆகியோர் நடித்து 1973ம் ஆண்டு ஜுன் மாதத்தில் வெளிவந்த இத்திரைப்படம் சில புதுமுக வரவுகளோடு, பல புதுமைகளைக் கொண்டு இன்றும் ரசிகர்களின் விருப்பத்திற்கினிய ஒரு திரைக்காவியமாகவும் இருக்கிறதென்றால் அது மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !