பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே…
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவர்களது இளமை மற்றம் நடுத்தர வயது காலங்களில் தமிழைத் தவிர மற்ற மொழிகளிலும் நடித்து பிரபலமாக இருந்தனர். குறிப்பாக உலக அளவில் அப்போது அதிக கவனத்தை ஈர்த்த ஹிந்தி மொழிப் படங்களில் அவர்கள் நடித்தனர். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் அங்கிருந்து விலகி வந்து தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதற்கடுத்து வந்த நடிகர்கள் சிலர் ஹிந்தியில் நடித்தாலும் அவர்களைப் போல பிரபலமாகவில்லை. தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் தனுஷ் மட்டுமே ஹிந்திக்கும் சென்று பிரபலமாகியுள்ளார். அவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'தேரே இஷ்க் மே' 100 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தெலுங்கிலும் 'குபேரா' படத்தில் நடித்து அங்கும் 100 கோடி வசூலைக் கடந்தார்.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு பான் இந்தியா பிரபலம் என்பது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. தங்களது சொந்த மொழியை விட்டு மற்ற மொழிகளிலும் பிரபலமாக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என நடிகர்கள் நினைக்கிறார்கள். அந்த விதத்தில் தெலுங்கில் பிரபாஸ், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும், கன்னடத்தில் யஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோரும் பிரபலமானார்கள்.
ஆனால், தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என யாருமே அந்த பிரபலத்தை இந்த 2025ம் ஆண்டிலும் தொட முடியாமல் இருக்கிறார்கள். தனுஷும் அந்தப் பட்டியலில் இருந்தாலும் அவர் தனித் தனியே தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100 கோடி வசூலைப் பெற்றுவிட்டார். தற்போதைய சூழலில் தமிழைக் கடந்து மற்ற மொழிகளில் பிரபலமாக இருப்பவர் என்பதில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார்.
பான் இந்தியா வெற்றி, 1000 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் இந்த ஆண்டும் நடைபெறாமல் போய்விட்டது. அடுத்த 2026ம் ஆண்டிலாவது அது நடக்கிறதா என்று பார்ப்போம்.