உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...!

இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...!

இருமனம் இணைந்து ஒரு மனமாவது திருமணம். அழகிய தம்பதியரின் பிணைப்பு, ஒற்றுமை மற்றும் முழுமையான புரிதலை இது குறிக்கும். அப்படி 2025ம் ஆண்டில் திருமணம் செய்த திரைப்பிரபலங்கள் யார் யார் என்பதை சற்றே திரும்பி பார்ப்போம்...

ஜன.,2: சாக்ஷி அகர்வால் - நவ்னீத் மிஸ்ரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், சில படங்களில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் நடித்துள்ளார். இவர், ஜனவரி 2ம் தேதி, தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்தார். கோவாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது.

ஜன.,11: பாடகர் அறிவு - கல்பனா

ராப் பாடல்கள் உள்பட, பல சினிமா பாடல்களை எழுதியும், பாடியும் பிரபலமான ‛தெருக்குரல்' அறிவு, ஜன.,11ம் தேதி தனது காதலி கல்பனாவை திருமணம் செய்துகொண்டார். சென்னை டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருமணம் நடைபெற்றது.

ஜன.,20: மவுனிகா - சந்தோஷ்

‛ரஞ்சனி, கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் நடித்த சந்தோஷ் மற்றும் ‛கனா காணும் காலங்கள்' சீரியலில் பிரபலமாகி, ‛லப்பர் பந்து' படத்தில் நடித்த மவுனிகா இருவரும் 2024ல் நிச்சயித்து, இந்தாண்டு ஜன.,19ல் திருமணம் செய்து கொண்டனர்.

பிப்.,2: இயக்குனர் அருண்குமார் - அஸ்வினி

‛பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன்' படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.யு. அருண்குமார், பிப்.2ல் அஸ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பிப்.,18 : சின்னத்திரை நடிகை மான்சி ஜோஷி - ராகவ்

‛அன்புடன் குஷி' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான மான்சி ஜோஷி, ராகவ் என்பவரை பிப்.,18/19 ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

பிப்.,21: வைபவி சாண்டில்யா - ஹர்ஷவர்தன் ஜே பாட்டீல்

‛சக்கப்போடு போடு ராஜா' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அடுத்து ‛இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி' படங்களில் நடித்த வைபவி சாண்டில்யா, ஒளிப்பதிவாளர் ஹர்ஷவர்தன் ஜே. பாட்டீல் என்பவரை பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்தார்.

பிப்.,24: நடிகை நர்கீஸ் பக்ரி - டோனி

பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி, அமெரிக்க தொழிலதிபர் டோனி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்கள் பிப்.,24ல் அமெரிக்காவில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

ஏப்.,16: பிரியங்கா - வசி

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா, ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் வசி என்பவரை 2வது திருமணம் செய்தார். இவர்களது திருமணம் ஏப்.,16ல் நடைபெற்றது.

ஏப்.,16: அபிநயா - வகிசனா கார்த்திக்

'நாடோடிகள்' படம் மூலம் பிரபலமான நடிகை அபிநயா, தான் 15 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை ஏப்ரல் 16ல் கரம் பிடித்தார்.

ஏப்.,20: பாவ்னி - அமீர்

விஜய் டிவியில் ‛ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த பாவனி மற்றும் விஜய் டிவியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்த அமீர் இருவரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காதலித்தனர். பின்னர் இருவரின் வீட்டு சம்மதத்துடன் ஏப்.,20ல் திருமணம் செய்துகொண்டனர்.

ஏப்.,30: ஹம்சவர்தன் - நிமிஷா

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனும் நடிகருமான ஹம்சவர்தன், கேரளாவை சேர்ந்த நிமிஷா என்பவரை ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்தார்.

மே.,08: அன்சல் பால் - நிததி ஆன்

‛ரெமோ' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் அன்சன் பால் என்பவருக்கும் திருவல்லாவை சேர்ந்த நிததி ஆன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

ஜூன் 06: அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி

நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் ஒரே மகன் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமணம் ஜூன் 06ல் நடைபெற்றது.

ஜூன் 08: தர்ஷன் - பூஜா

நடிகர் சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமாரின் மகனான தர்ஷன், பூஜா என்ற பெண்ணை காதலித்து ஜூன் 08ல் திருமணம் செய்தார்.

செப்.,09: கிரேஸ் ஆண்டனி - அபி டாம் சிரியாக்

மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, தமிழில் ‛பறந்து போ' படத்தில் நடித்தார். இவர் தனது 9 வருட காதலரான இசை அமைப்பாளர் அபி டாம் சிரியாக் என்பவரை செப்.,09ல் கரம் பிடித்தார்.

அக்.,31: அபிஷன் ஜீவிந்த் - அகிலா

‛டூரிஸ்ட் பேமிலி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், தனது நீண்ட நாள் காதலியான அகிலா என்பவரை அக்.,31ல் திருமணம் செய்தார்.

நவ.,27: அனிருத்தா ஸ்ரீகாந்த் - சம்யுக்தா சண்முகநாதன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் மகனும் கிரிக்கெட் வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்த், நடிகை சம்யுக்தா சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் இது 2வது திருமணம். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா சண்முகநாதன், ‛வாரிசு, மை டியர் பூதம், காபி வித் காதல்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

டிச.,1 : சமந்தா - ராஜ் நிடிமொரு

நடிகை சமந்தா, ‛பேமிலி மேன், சிட்டாடல்' வெப் தொடர்களின் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை காதலித்து வந்த நிலையில் டிச.,1ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் இது 2வது திருமணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !