கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம்
பிரபல மலையாள வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் விநாயகன் தமிழில் 'திமிரு, மரியான்' மற்றும் 'ஜெயிலர்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'களம் காவல்' படத்தில் இவர் கதாநாயகனாகவும் மம்முட்டி வில்லனாகவும் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து மலையாளத்தில் உருவாகி வரும் 'ஆடு 3' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார் விநாயகன். அந்த படப்பிடிப்பின்போது ஒரு ஆக்சன் காட்சியில் அவருக்கு கழுத்தில் அடிபட்டது.
இதனை தொடர்ந்து கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கழுத்தில் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்கள் அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிலர் அவர் சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தாலும் ஒரு சிலர் விநாயகனின் முந்தைய செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் விதமாக இதற்கெல்லாம் கர்மா தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் பதிவுகளை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விநாயகன் வெளியிட்டுள்ள பதிவில், “தயவுசெய்து கர்மா பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். என்னுடைய சாவை நேரம் தான் தீர்மானிக்கும். நான் ஒன்றும் என்னுடைய கெட்ட செயல்களுக்காக இந்த காயத்தை அடையவில்லை. என்னுடைய வேலை நேரத்தில், தங்களை மிகுந்த அறிவார்ந்தவர்கள் போல் காட்டிக்கொண்ட ஒரு சிலரை நம்பியதால் தான் இது நடந்தது. என்னுடன் உறுதுணையாக நிற்பவர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை” என்று கூறியுள்ளார்.