உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ்

'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ்

சமீபத்தில் வெளியான 'கொம்புசீவி'யில் நாயகன் சண்முகபாண்டியனுக்கு, சிறுவயது 'டூப்'பாக நடித்தவர் தனுஷ். இவர் ஹீரோ தனுஷ் அல்ல; 14 வயதான மாஸ்டர் தனுஷ். சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்து தடைசெய்யப்பட்ட 'டிக்டாக்'கில் பிரபலமானவர். மதுரை மணிநகரம் வீரமாமுனிவர் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி நாடகத்தில் பங்கேற்று வளர்ந்த இவர் நடிப்பில் சரித்திரம் படைப்பார் என்று தற்போதைய இயக்குனர்கள் இவரது கலை ஆர்வத்துக்கு தீனிபோட்டு வளர்க்கின்றனர்.

இவரது அப்பா, மதுரை அருகே கருமாத்துார் மணிமாறன். சினிமா பாடலாசிரியர். மாஸ்க் படத்தில் 'கண்ணுமுழி காக்காமுள்ளு... புருவம் ரெண்டும் குறுவை நெல்லு' என்ற பாடலுக்கு சொந்தக்காரர். அவருடன் தேவராட்டம் சினிமா பட 'ஆடிஷனுக்கு' சென்று வந்த தனுஷ் அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார்.

'சுல்தான்', சசிகுமாருடன் 'எம்.ஜி.ஆர்.,மகன்' என பல படங்கள் வந்தன. இயக்குனர் பொன்ராம், சமுத்திரக்கனி போன்றோரின் மோதிர கைகளால் குட்டுபட்டபின் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. கொம்பு சீவி படத்தில் ஹீரோ சண்முகபாண்டியனின் இளமைக்கால காட்சிக்கு சிறுவன் தேவையென கூறியுள்ளனர்.

யாரை தேர்வு செய்ய என தேடலில் இயக்குனர்கள் இறங்கியபோது, சிவகார்த்திகேயனுக்கு அடித்தளம் போட்ட இயக்குனர் உசிலம்பட்டி பொன்ராம், 'கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன்' என்று தனுஷூக்கு ஓகே சொல்லியுள்ளார்.

அவ்வளவுதான் படத்தில், கால்மணி நேரத்திற்கும் மேலாக சுறுசுறு சண்முகபாண்டியனின் இளமை நகலாக வந்து, சுறுசுறு நடிப்பில் ஜமாய்த்துள்ளார்.

இயக்குனர் பொன்ராம், 'ஒருநாள் உன்னை எனது ஹீரோவாக்குகிறேன்' என்று கூறியதாக பெருமிதப்படுகிறார் தனுஷ்.

படத்தில், கஞ்சா வியாபாரியாக நடித்த சரத்குமாரிடம் சிறுவனாக வேலை கேட்பதாக இருக்கட்டும்... அவரிடம் வேலைக்கு சேர்ந்தபின் பஸ்சில் கஞ்சா கடத்தி வரும்போது போலீஸிடம் இருந்து தப்பிக்க பஸ்சில் இருந்து வெளியே பாய்வதாக இருக்கட்டும், சரத்குமாரை எதிரி ஒருவர் கீழேதள்ளி கொல்ல வரும்போது சரத்குமார் கத்தியை எடுத்துதா என கேட்கையில், அதை அப்படியே தட்டி துாக்கி, எதிரியை மாஸ்டர் தனுஷே கத்தியால் குத்தி விரட்டுவதாகட்டும் நடிப்பில் அனாயசம் காட்டியுள்ளார்.

தனுஷின் நடிப்பை வியந்து 'நீ நல்லா வருவே' என்ற சரத்குமார் ஓய்வு நேரத்தில் கேரவனுக்குள் அழைத்துச் சென்று, நடிப்பு தொழிலில் தான் உடலில் வாங்கிய தழும்புகளை காட்டி 'ரிஸ்க்' காட்சிகளின் கொடூரங்களை விளக்கியுள்ளதை பெருமையாக சொல்கிறார் தனுஷ். பள்ளியில் சிலம்ப போட்டியில் மாநில பதக்கம் வென்ற தனுஷூக்கு கராத்தேவும் தெரியும். தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்ட் வந்து பெரியவனானதும், நம்முடன் பலர் நடிக்க விரும்பும் அளவு பெயரெடுக்க ஆசை என்கிறார்.

இப்படி நடிப்பு... நடிப்பு... என்றிருந்தாலும் அது படிப்புக்கு இடைஞ்சலாகி விடக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. கொம்புசீவி படத்திற்காக தேனி, வைகை அணை பகுதியில் 10 நாட்கள் பணியாற்றியுள்ளார். கலை மீது காதல் கொண்டவர்களே அவருக்கு ஆசிரியர்களாக வாய்த்திருப்பதால் விடுப்பு அளித்தும், கல்விக்கும் உதவுகின்றனர்.

பெற்றோர், இயக்குனர், ஆசிரியர்கள் என பலரும் 'கொம்புசீவி' விடுவதால்... சினிமாவில் இன்னொரு தனுஷ் விரைவில் உருவாகி புகழ்பெறுவது திண்ணமே.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !