உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு

படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு


மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 'தி ராஜா சாப்'. பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத், ஜரினா வாஹேப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது.

பல முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த படக்குழு, விரைவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பிரபாஸ், இயக்குனர் மாருதி, நடிகைகள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட இயக்குனர் மாருதி கண்ணீர் விட்டு அழுதார். அவரை பிரபாஸ் தேற்றி ஆறுதல் கூறினார்.


நிகழ்ச்சியில் இயக்குனர் மாருதி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் படமான தி ராஜா சாப் நிச்சயம் அவரின் ரசிகர்களையும், எதிர்ப்பாளர்களையும் மகிழ்விக்கும். நிச்சயமாக வெற்றி பெறும். அப்படி படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சதவீதம் ஏமாற்றம் அளித்தாலும் என் வீட்டிற்கு வந்து விமர்சிக்கலாம். பிரபாஸை நேசிக்கும் யாராவது எங்களை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தால் கோண்டாபூர் பகுதியில் உள்ள வில்லா எண் 16ல் உள்ள கொல்லா லக்ஸரிக்கு வரலாம். அங்குதான் என் வீடு உள்ளது.

கல்லறைக்குச் செல்லும்போது கூட நான் வழக்கமாக அழுவதில்லை. இந்த கண்ணீர் இயற்கையானது. கடந்த சில ஆண்டுகளாக நான் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டேன். இந்த படம் ரிலீசாகாது என்றெல்லாம் சொன்னார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படத்தை தயாரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் மும்பை சென்று பிரபாஸை சந்தித்தேன். அப்போது அவர் ராமர் வேடத்தில் இருந்தார். அந்த ராமர் இந்த ஆஞ்சநேயருக்கு (மாருதி) ஒரு படம் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். இவ்வாறு இயக்குனர் மாருதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !