நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத்
இயக்குனர் வினோத் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தீரன் படம் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்து தொடர்ந்து அஜித்தின் மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்று தற்போது விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ள ஜனநாயகன் படத்தையும் இயக்கும் அளவிற்கு முன்னணி இயக்குனராக மாறியவர். சமீபகாலமாகவே பாலிவுட் நடிகர்களை அழைத்து வந்து பிரபல ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க வைக்கும் வரிசையில் ஜனநாயகன் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினோத்.
பாபி தியோல் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “எதற்காக ஹிந்தி சினிமா கடந்த சில காலமாகவே பாபி தியோலை சரியாக கண்டு கொள்ளாமல் விட்டது என்று எனக்கு தெரியவில்லை. அவர் உண்மையிலேயே ஒரு ஆக் ஷன் ஹீரோ மெட்டீரியல். சில கதாபாத்திரங்களை எழுதும்போது அவை எப்படி திரையில் வரப்போகிறது என்கிற ஆச்சரியம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் நான் எழுதியதை விட நான் எதிர்பார்க்காத விதமாக பாபி தியோல் மிகச் சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை நடித்துள்ளார். அவர் ரொம்பவே அமைதியானவர். ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர். எனக்கு ஹிந்தியில் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவருடன் இணைந்து ஒரு ஆக் ஷன் படம் செய்ய விரும்புகிறேன். அந்த அளவிற்கு அவருடன் பணியாற்றுவதை நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.