15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் முன்பு தனது படங்களில் சிறிய கேரக்டரில் தலைகாட்டுவார் 2010ம் ஆண்டு தான் இயக்கிய 'நந்தலாலா' படத்தில் கதை நாயகனாக நடித்தார். அதன்பிறகு வில்லன், காமெடியன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அவர் மீண்டும் 'சுப்ரமணி' என்ற படத்தில் கதை நாயகான நடிக்கிறார்.
இந்த படத்தை மிஷ்கினின் குருவான இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்குகிறார். ரிச்சர்ட் ரிஷி, நட்டி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சனுக்யா இசையமைத்துள்ளார்.
படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர்கே செல்வா, இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏற்றிராத மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உதவி இயக்குநராகவே மீண்டும் மாறி அவர் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சில காட்சிகளையும் அவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
5 கொடூர கொலை சம்பவங்களை மூன்று காவல் அதிகாரிகளின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் அணுகி இந்த படு பாதக சம்பவங்களை செய்யும் இருண்ட அரக்கனை மேலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்குள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை இப்படத்தில் அமைத்துள்ளோம் என்று கூறினார்.