உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திரெளபதி 2' பாடலில் சின்மயி பாடல் நீக்கம்: இயக்குனர் பேட்டி

'திரெளபதி 2' பாடலில் சின்மயி பாடல் நீக்கம்: இயக்குனர் பேட்டி


'பகாசுரன்' படத்திற்கு பிறகு மோகன் ஜி இயக்கி உள்ள படம் 'திரெளபதி 2'. ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப்படத்துக்கு பிலிப் ஆர் சுந்தர், ஒளிப்பதிவு செய்துள்ளார். நேதாஜி புரொடக்ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்பு நான் இயக்கிய படங்கள் அனைத்தும் உண்மை கதைகள். அதே போன்று இந்த படம் ஒரு சரித்திர உண்மை கதை. தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு முன்பு நடந்த ஹொசாலயர்கள் ஆட்சி காலத்தில் நடந்த கதை.

தமிழகத்திற்குள் இஸ்லாமிய மன்னர்கள், குறிப்பாக முகமது பின் துக்ளக் நுழைந்தார். அவர்கள் வந்த நோக்கம் என்ன அதை இங்குள்ள மன்னர்கள் எப்படி எதிர்த்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் இந்து மன்னர்கள், முகலாய மன்னர்களின் மோதலாக இருந்தாலும், அடிப்படையில் இது மத மோதல் கதை அல்ல. அதனால் இது இந்து முஸ்லிம்களுக்கு இடையே எந்த மோதலையும் ஏற்படுத்தாது. மாறாக ஒரு வரலாற்று உண்மையை சொல்லும். இதற்காக நிறைய ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளேன்.

இந்த படம் சரித்திர படமாக இருந்தாலும், நிகழ்கால கதையுடன் ஒரு சின்ன தொடர்பும் இருக்கும். 30 கோடிக்கும் குறைவான செலவில் 31 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். ஆயிரம் இடங்களுக்கு மேல் விஎப்எஸ் காட்சிகள் இருக்கிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. சென்னை, அரியலூர், ஜெயம்கொண்டம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

எந்த முகாந்திரமும் இல்லாமல் எங்கள் படக்குழுவை களங்கப்படுத்தும் வகையில் சின்மயி நடந்துகொண்டது பற்றி இயக்குனர் சங்கம், , தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். உரிய அவகாசம் கொடுத்தும் சின்மயி தரப்பில் இருந்து பதில் வராத நிலையில், படத்தில் இருந்த சின்மயி பாடலை நீக்கிவிட்டோம். அந்த பாடலை வேறொரு பாடகியை வைத்து பாட வைத்துள்ளோம். அந்த பாடல்தான் படத்தில் இடம்பெறும்.

உண்மையைத் தழுவி நான் எடுக்கும் படங்களுக்கு எதிர்ப்பும், சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஏன் என்று எனக்கு தெரியவில்லை. என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்து பேசிய பாடகி சின்மயி, நடிகை ஷீலா ஆகியோரின் நடவடிக்கைக்கு பின்னணி என்ன? என்பதை விரைவில் வெளிப்படையாக பேச இருக்கிறேன்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறேம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !