2026 பொங்கலை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படமும், ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படமும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் போட்டியில் குதிக்கின்றன என்றதும் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதம் ஆரம்பித்து இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.
'ஜனநாயகன்' டிரைலர் வெளியான அடுத்த நாளான நேற்று 'பராசக்தி' டிரைலரும் வெளியிடப்பட்டது. 'ஜனநாயகன்' டிரைலர் 24 மணி நேரத்தில் தமிழ் சினிமா டிரைலர்களில் 34 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தெலுங்கு, ஹிந்தி டிரைலர்களையும் சேர்த்து 52 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த அளவிற்கு அது ரசிகர்களின் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது என்றார்கள்.
ஆனால், தற்போது 'ஜனநாயகன்' டிரைலருடன் 'பராசக்தி' டிரைலரும் போட்டியிட ஆரம்பித்துள்ளது. நேற்று மாலை வெளியான இந்த டிரைலர் தற்போது 26 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்று மாலை வரை நேரம் உள்ளதால் 'ஜனநாயகன்' டிரைலர் படைத்த புதிய சாதனையான 34 மில்லியன் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிரைலரில் எழுந்துள்ள இந்த போட்டி படம் வெளியான பிறகும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.