வாசகர்கள் கருத்துகள் (2)
அட போயா நாற்பத்தியொரு பேர் செத்தபோது கண்டுக்காம ஓடின தலைவனுக்கு வன்மம்
விஜய் மேல, எவ்வளவு தான் உங்க வன்மத்த கொட்டுவிங்க,
தமிழ் சினிமாவில் அட்லீ போன்ற இயக்குனர்கள் இருப்பது போல, தெலுங்கு சினிமாவிலும் இருக்கிறார்கள். பல பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்து அதை அந்தந்த காலத்திற்கேற்ப கதையை மாற்றி, கதாபாத்திரங்களை கொஞ்சம் மாற்றி படத்தை எடுப்பதை தெலுங்கில் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு உதாரணங்களாக சில பல படங்களைச் சொல்லலாம். ஏன் 'பாகுபலி' படத்தின் கதை கூட எம்ஜிஆர் நடித்து வெளிவந்த 'அடிமைப் பெண்' படத்தின் கதைதான் என்ற சர்ச்சை வந்தது.
விஜய் நடித்து இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் என்பதை அதன் டிரைலர் உறுதி செய்துவிட்டது.
இந்நிலையில் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையே தமிழில் சரத்குமார், நமீதா, வடிவேலு நடித்து 2004ல் வெளிவந்த 'ஏய்' படத்தின் உல்டா தான் என்பது இங்கு பல பேருக்குத் தெரியாது.
'ஏய்' படத்தின் கதை இதுதான்…
சரத்குமார் பழனியில் அவரது தங்கை ரித்திகாவுடன் வசித்து வருகிறார். ரித்திகாவுக்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஒரு சந்தர்ப்பத்தில் ரவுடி வின்சென்ட் அசோகன், ஒரு காதல் பிரச்சனையில் ரித்திகாவை அவமானப்படுத்துகிறார். அதைக் கேள்விப்பட்ட சரத்குமார், வின்சென்ட் அசோகனை அடித்துத் துவைக்கிறார். அதன்பின்தான் சரத்குமார் யார், அவர் தங்கை ரித்திகா அல்ல என்ற உண்மை தெரிய வருகிறது.
பிளாஷ்பேக்கில், ராணுவத்தில் வேலை செய்யும் சரத்குமார், போலீஸ் ஆக இருக்கும் கலாபவன் மணியும் நண்பர்கள். காவல்துறை அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்திக்கும், சரத்குமாருக்கும் மோதல் வருகிறது. ஆசிஷைப் பார்த்து அவர் 'ஏய்' என்று அதட்டியதே அதற்குக் காரணம். சரத்குமாரும், கலாபவண் மணியும் சேர்ந்து மாறுவேடங்களில் சில அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார்கள். அதில் கலாபவண் மணி கொல்லப்படுகிறார். இறப்பதற்கு முன் தனது தங்கை ரித்திகாவை, படிக்க வைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்று கேட்கிறார்.
அதனால், சரத்குமார், ரித்திகாவை அழைத்துக் கொண்டு பழனிக்குச் சென்று விடுகிறார். அதன்பின் அவர் ரித்திகாவை கலெக்டர் ஆக்கினாரா, வில்லன்களைப் பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. அதாவது நண்பனின் தங்கை ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் நாயகன்.
சரி, 'பகவந்த் கேசரி' படத்தின் கதை என்ன தெரியுமா…
சிறைக் கைதியாக இருப்பவர் பாலகிருஷ்ணா, அந்த சிறையில் ஜெயிலராக இருப்பவர் சரத்குமார். ஒரு விபத்தில் சரத்குமார் இறந்து போக, அவரது மகள் ஸ்ரீலீலாவை எடுத்து வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார் பாலகிருஷ்ணா. ஸ்ரீலீலா ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சரத்குமாரின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் இருக்கிறார் பாலகிருஷ்ணா. ஆனால், ஸ்ரீலீலாவுக்கு, காதலன் ராகுல் ரவியைத் திருமணம் செய்து கொள்ள ஆசை. இதனிடையே பிசினஸ்மேன் மற்றும் மாபியா தலைவனான அர்ஜுன் ராம்பால் ஆட்கள், ஒரு கொலை விவகார ஆதாரம் காரணமாக ஸ்ரீலீலாவைக் கடத்தி விடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஸ்ரீலீலாவை மீட்க கிளம்புகிறார் பாலகிருஷ்ணா. பின்னர்தான் தனது வளர்ப்பு அப்பா பாலகிருஷ்ணா பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார். வில்லனிடமிருந்து தனது வளர்ப்பு மகளைக் காப்பாற்றினாரா பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா ராணுவத்தில் சேர்ந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நண்பன் மகளின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் நாயகன்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 'ஏய்' படத்தில் கதாநாயகனாக நடித்த சரத்குமார், 'பகவந்த் கேசரி' படத்தில் கதாநாயகியின் அப்பாவாக ஜெயிலர் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அவருக்கு எப்படியும் 'ஏய்' படத்தின் கதையைத்தான் 'பகவந்த் கேசரி' ஆக மாற்றுகிறார்கள் என்பது தெரிந்திருக்காதா என்ன ?.
'ஏய், பகவந்த் கேசரி' படங்கள் சுட்ட கதை 'பாபு'...
ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில், சிவாஜிகணேசன், பாலாஜி, சவுகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்து 1971ல் வெளிவந்த 'பாபு' படம்தான், 'ஏய், பகவந்த் கேசரி' படங்களுக்காக சுட்ட கதை.
கை ரிக்ஷா ஓட்டுபவர் சிவாஜி கணேசன். அவரும் வசதியானவரான பாலாஜியும் நண்பர்களாகிறார்கள். பாலாஜி கார் விபத்தில் இறந்து போக, அவரது மகள் நிர்மலாவை படித்து பட்டதாரி ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறார் சிவாஜி. கல்லூரியில் படிக்கும் நிர்மலா, சிவகுமாரைக் காதலிக்கிறார். அதனால், அவரது படிப்பு பாதிக்கப்படுகிறது. அதன்பின் உண்மை தெரிந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார் நிர்மலா. பின்னர், நிர்மலாவுக்கும், சிவகுமாருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் அவர்களை விட்டு விலக நினைக்கிறார் சிவாஜி. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். தன் மீது தனி பாசம் வைத்த ஒருவரின் மகளை படிக்க வைக்கத் துடிக்கும் நாயகன்.
'பாபு' படத்தின் ஒரிஜனல் கதை எது தெரியுமா…?.
'பாபு' படம், கதை மலையாளத்தில் சத்யன், பிரேம் நசீர், கேஆர் விஜயா நடித்து, கேஎஸ் சேது மாதவன் இயக்கத்தில் 1965ல் வெளிவந்த 'ஓடையில் நின்னு' படத்தின் ரீமேக்காக உருவானது. 'ஓடையில் நின்னு' என்ற பெயரில் பிரபல மலையாள நாவலாசிரியரான கேசவ தேவ் எழுதிய நாவலை அப்படியே திரைப்படமாக உருவாக்கினார் சேது மாதவன். 'பாபு' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீதேவி என்பது கூடுதல் தகவல்.
1973ல் 'மாரப்புரனி மனுஷி' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தில் நாகேஸ்வரராவ், மஞ்சுளா நடிக்க, டி ராமராவ் படத்தை இயக்கினார்.
1985ல் 'பாபு' என்ற பெயரிலேயே ஹிந்தி ரீமேக்கை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி, ரதி மற்றும் பலர் நடிக்க இப்படம் வெளிவந்தது.
ஆக, இப்போது வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படத்தின் மூலக் கதை என்று எடுத்துக் கொண்டால் அதற்கு 60 வருட வரலாறு இருக்கிறது.
'பகவந்த் கேசரி' படத்தை 7 கோடி கொடுத்து ரீமேக் உரிமை வாங்கித்தான் 'ஜனநாயகன்' படத்தை ரீமேக் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படியென்றால் அதற்கு முன்பு வந்த 'ஏய், பாபு, ஓடையில் நின்னு' என பல மூலப் படங்களுக்கான ரீமேக் உரிமையை வாங்குவதும் முறைதானே…????.
அட போயா நாற்பத்தியொரு பேர் செத்தபோது கண்டுக்காம ஓடின தலைவனுக்கு வன்மம்
விஜய் மேல, எவ்வளவு தான் உங்க வன்மத்த கொட்டுவிங்க,