கலைக்கல்லூரியில் டாக்டர்களை தேடிய ஸ்ரீலீலா
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. தற்போது முதல் முறையாக தமிழில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் நாளை, ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதன் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையை தொடர்ந்து கேரளாவிலும் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு கொச்சியில் உள்ள பிரபலமான கலைக்கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது. பராசக்தி பட குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆர்வமுடன் பேச ஆரம்பித்த ஸ்ரீலீலா அது கலைக்கல்லூரி என்பது தெரியாமல் மருத்துவக் கல்லூரி என நினைத்துக் கொண்டு, “எத்தனை டாக்டர்கள் இங்கே இருக்கிறீர்கள்?” என்று உற்சாகமாக கேள்வி கேட்டார். ஆனால் அங்கிருந்த மாணவர்கள் அவரது கேள்வியால் குழம்பிப் போனார்கள். அருகில் இருந்த சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் இது கலைக்கல்லூரி என்று சொன்னதும் சுதாரித்துக் கொண்டு அப்படியே டாபிக்கை மாற்றி பராசக்தி படம் குறித்தும் மலையாள திரைப்படங்கள் குறித்தும் பேச ஆரம்பித்து ஒரு வழியாக சமாளித்தார் ஸ்ரீலீலா. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.