பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி
ADDED : 2 days ago
நடிகர் திலகம் சிவாஜி பிற்காலத்தில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு தந்தையாக நடித்துள்ளார். ஆனால் அவர் இளம் வயதாக இருக்கும்போது, படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹீரோக்களின் தந்தையாக நடித்துள்ளார்.
அதில் முக்கியமான படம் 'வாழ்விலே ஒரு நாள்'. இந்தப் படத்தில் தன் வயதையொத்த ஸ்ரீராம் என்ற நடிகருக்கு தந்தையாக நடித்தார். செய்த குற்றத்திற்காக தந்தையையே கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக ஸ்ரீராம் நடித்தார். இவர்களுடன் ஜி.வரலட்சுமி, ராஜசுலோச்சனா, வி.கே.ராமசாமி. உள்ளிட்ட பலர் நடித்தனர்.
வி.கே.ராமசாமி வில்லனாக நடித்தார். சிவாஜிக்கும், வி.கே.ராமசாமிக்கும் இரண்டு சண்டை காட்சிகள் கூட படத்தில் உண்டு. அப்போதைய அரசியல் பிரமுகரான ஏவிபி.ஆசைத்தம்பி என்பவர் எழுதிய 'கசப்பும் இனிப்பும்' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது.