உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம்

பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம்

'செண்பக தோட்டம்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சிற்பி. அன்னை வயல், கோகுலம், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித் தா, அம்மன் கோவில் வாசலிலே, சுந்தர புருஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தார். ஆனால் அவரின் மனதில் ஆறாத காயம் ஒன்று உண்டு.

அது அவர் ரஜினி படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை இழந்தது. மனோபாலா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் 'ஊர்க்காவலன்'. பாண்டியன், ராதிகா, ரகுவரன் சங்கிலி முருகன், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்தார். இந்த படத்திற்கு அப்போது வளர்ந்து வந்த சிற்பி இசை அமைப்பதாக முடிவாகி இருந்தது. இதனால் மிகவும் சந்தோஷம் அடைந்த சிற்பி, வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத தட்டுடன் சத்யஜோதி பிலிம்சின் உரிமையாளர் ஆர்.எம்.வீரப்பனை சந்திக்க சென்றார்.

அப்போது அவர் சங்கர்-கணேஷை அழைத்து இசை குறித்து பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்த உதவியாளர் பிரசாத தட்டுடன் நின்ற கொண்டிருந்த சிற்பியிடம் படத்திற்கு சங்கர் - கணேஷ் தான் இசை அமைக்க போகிறார்கள், நீங்கள் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்பி அங்கேயே மயங்கி விழுந்தார்.

அப்போது அங்கு வந்த இயக்குனர் மனோபாலா அவரை தேற்றி அனுப்பி வைத்தார். ஆர்.எம்.வீரப்பனிடம் 'ஏன் சிற்பியை நீக்கினீர்கள்' என்று கேட்டதற்கு அவன் சின்ன பையனாக இருக்கிறான். ரஜினி படத்திற்கெல்லாம் தாங்க மாட்டான். அதனால் மாற்றி விட்டேன் என்றார். ஆர்.எம்.வீரப்பனின் முடிவை யாரும் மாற்ற முடியாது என்பதால் மனோபாலாவும் அமைதியாகி விட்டார்.

அதன்பிறகு சிற்பி ரஜினி படத்திற்கு இசை அமைக்கவே இல்லை. ரஜினி படத்திற்கு இசை அமைத்திருந்தால் தன் வாழ்க்கையே மாறி இருக்கும் என்றும், வாய்ப்பு மறுக்கப்பட்டது என் மனதில் ஏற்பட்ட பெரிய காயம் என்றும் சிற்பி பிற்காலத்தில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !